பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கல்வித் துறையில்

இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம் ஆட்சி செய்கின்றன. இந் நிலையில் தாய்மொழியுணர்வு தலை தூக்குமா? பிஞ்சு நெஞ்சங் களிலேயே மொழியுணர்வு வேரோடு கல்லியெறியப் படுகிறதே! அப்பேசும் பொற்சித்திரங்கள், தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றழைக்கும் இன்னொலி, நம் செவியில் தேனாக வந்து பாய வில்லையே! அயன்மொழி வேரூன்றிய அவ்விளைய உள்ளங்களிலே ‘என் மொழி தமிழ், நான் தமிழன்’ என்ற உணர்வுகள் எப்படி யரும்பும்? நாட்டின் எதிர்காலச் செல்வங்களாகிய இவர்கள் வளர்ந்து உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்வரை அயன் மொழியிலேயே பயில்வா ராயின், தாய் மொழியில் அறிவியலை எவ்வாறு வளர்ப்பர்? இரண்டுங் கெட்ட நிலையிற்றானே தடுமாறுவர். அத்தி பூத்தாற் போல ஆங்கொருவர் ஈங்கொருவர், தமிழில் அறிவியல் வளங் காட்டுவார் உளரேயெனில், விதிவிலக்காக அவர் காணப்படுத லன்றி மற்றொன்றில்லை.

அரியணையில் அமர்ந்திருப்போர் தமிழ், தமிழ் என்று வாய்ப்பறை சாற்றினும் கல்வித் துறையிலிருந்து வெளிப்படும் ஆணைகள், அறிக்கைகள் எம்மொழியில் வருகின்றன? தமிழிலா வருகின்றன? அவ்வாணைகள், மாவட்டக் கல்வி அலுவலர்க்கே தெளிவாக விளங்காமல் தடுமாறச் செய்வதும் உண்டு. ஒரு மாவட்ட அலுவலர் ஒருவகையாகப் பொருள் கொள்ளுவார். அடுத்த மாவட்டத்தவர் வேறுவகையிற் பொருள்சொல்வார்; இறுதியில் தணிக்கைக்கு வருவோர், ‘இரண்டுந் தவறு’ என்று மற்றொரு புதுப் பொருள் தருவார். மொழி வளர்க்கும் பண்ணை யாகிய கல்வித் துறையே சீர்குலைந்திருக்கும்போது தமிழ் எவ்வாறு வளரும்?