பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

'நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்' என்னுங் குறிக்கோள் கொண்ட பாரதிதான் புதுமைக் கவிதையுலகுக்கு முதல் வழிகாட்டி. அவர் காட்டிய வழியிற்றான் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.இராம லிங்கம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், ச.து.சு.யோகி போன்ற கவிஞர்கள் தொடர்ந்து சென்றனர். இவர்கள் நடந்த நெறியில் நூற்றுக்கணக் கான கவிஞர்கள் தடம் பார்த்து அடியொற்றிச் சென்றனர்; செல்கின்றனர்.

கவிதை வடிவில் தன் வரலாறு புனைவது பாரதி காட்டிய ஒரு புதுநெறியாகும். அந்நெறியில் சுயசரிதை என்ற பெயரில் கப்ப லோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கவிதை நூல் ஒன்று யாத்தளித்துள்ளார். பல மொழிபெயர்ப்புக் கவிதைகளும் ஆக்கி யுள்ளார்.

இவ்வாறு எண்ணற்ற கவிஞர்கள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிப் பாமாலை புனைந்துள்ளனர். ஈண்டு எழுதப்பட்டோர் சிலர். பெருகும் என்றஞ்சி எழுதாது விடப்பட்டோர் பலர். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைகளின் நிலையைப் பொதுப் பட விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இது தனி நூல்களின் திறனாய்வு அன்று. அவ்வாறு தனித்தனி யாகத் திறனாய்வு செய்து எழுதப்புகின் அஃது ஒரு பெருநூல் வடிவம் பெறும்.

எதிர்காலம் பொற்காலம்

பயன்மரங்களும், மலர்ச் செடிகளும் நிறைந்த தோட்டத் துக்கு நீர் பாய்ச்சுகின்றோம். அத் தோட்டத்துள் அவை மட்டுமா வளர்ந்து பயன் தருகின்றன? நீர் செல்லும் நெறியிடை வேண்டப் படாத சில செடிகளும் தோன்றிவிடுகின்றன. அதைப் போலவே கவிதைத் தோட்டத்துள் கனி மரங் களோடு வேறு சில செடிகளும் தோன்றத்தான் செய்யும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளல் கால தேவன் செயலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மரபு மாறாமல், இலக்கணத்தை இகழாமல், உயரிய-இனிய-அழகிய ஒண்டமிழ்ச் சொற்கள் பெய்து நாட்டுக்கு வேண்டும் நற்கருத்துகளை அடிப்படை யாகக் கொண்டு நிலைத்து நிற்கும் கவிதைகளைக் காவியங் களைப் படைக்கவல்ல கவிஞர்கள் தோன்றி வருகின்றனர்.