பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்43

கூட்டுக்களி

கவியரசர் பாரதியாருக்கு ஆசை ஒன்றுண்டு. அஃது இவ் வையத்தைப் பாலிக்க வேண்டும் என்பதாகும். எத்திறத்தால் பாலிப்பது? படைத்திறத்தாலா? அன்றிப் பிறிதொரு சூழ்ச்சித் திறத்தாலா? அன்று. பாட்டுத் திறத்தாலே பாலிக்க வேண்டும் என்கிறார். அப் பாட்டுத் திறம் எவ்வழியாற் பெறுதல் கூடும் என வினவின் "கூட்டுக் களியினிலே" எனக் கூறக் கேட்கிறோம். பொருளோடு கூடும் கூட்டுக் களியினிலேதான் கவிதைகள் தாமாகப் பிறக்கின்றன என்னும் உண்மையை நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்கிப் படப்பிடிப்பாக்கிக் காட்டுகிறார், "கூட்டுக் களியினிலே - கவிதை கொண்டு தரவேணும்" என்று. கொண்டு தர வேண்டும் என்றால் பொருள் என்ன? கவிதைகள் தாமாகப் பீறிட்டுக்கொண்டு வெளி வருதல் வேண்டும் என்பது தானே பொருள். பத்தினிப் பெண்ணும் தாமும் கூடும் கூட்டுக்களி எனக் காதற்பொருள் பற்றிப் பாரதியார் கூறியிருப்பினும் நாம், கவிஞனும் பொருளும் வேறு பாடின்றி இணைந்து நிற்பதாற் பெறும் களி என்றே பொதுப்படக் கொள்வோம். இங்கே 'களி' என்ற சொல்லை உன்னிப் பார்த்தல் வேண்டும். களி என்ற சொல் மகிழ்ச்சி, இன்பம் என்ற பொருள் தருவதாக மட்டும் அமையவில்லை. அப் பொதுப் பொருளைத் தருவது உண்மை யாயினும் அச்சொல் எடுத்தாளப் பெறும் இடம், சூழ்நிலை முதலியவற்றால் வேறொரு சிறப்புப் பொருளையும் தன்னுள் அடக்கிக்கொண்டு நிற்பதை நாம் உணர்தல் வேண்டும். இங்கேதான் அந்தச் சொல்லின் முழு அழகையும் நாம் சுவைக்க முடிகிறது.

நனவழிந்த கனவு

களி என்பது தன்னை மறந்த ஒரு நிலையைக் குறிக்கிறது. கள்ளுண்டோன் எவ்வாறு தன்னை மறந்த நிலையை, ஓரின்பத்தை அடைகின்றானோ அந்த நிலைக்கும் இன்பத்துக்குந்தான் களி என்று பொருள். ஆகவே, கவிஞன் அந்தக் களிநிலையிலே தன்னை மறந்து பொருளோடு கூடிவிடுகிறான். அப்பொழுது பொதுவான மனிதர் நிலையினின்றும் உயர்ந்து விடுகிறான்; வானத்திலே மிதக்கின்றான்; பறக்கின்றான்; அங்கிருந்து உலகையும் உலகப் பொருள்களையும் காண்கின்றான்; சொக்கி விடுகின்றான்; அம்மயக்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறான். இன்பக் கனவுகளை அடுக்கடுக்காகக் காண்