பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்49

மாறாகக் கருதித் தன் தோழர்களை அழைத்துப் போருக்கு அணிய மாக இருக்குமாறு வீரவுரை ஆற்றுகிறான். அப்பொழுது,

"ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
       வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?"

என்று பேசுகிறான். மீண்டும் இப் பாடலை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். சொல்லும்பொழுது நம் கண்முன் கம்பனா நிற்கிறான்? வெங்கரி அனைய - விற்பிடித்த குகன்தான் நிற்கிறான்.

இவ்வண்ணம் பொருள்களுடன் ஒன்றும் பொழுதுதான் உண்மைக் கவிதைகள் பிறக்கின்றன என்னும் உண்மையை இதன் வாயிலாக நாம் உணர்கிறோம். பாரதியார் இவ்வுண்மையை நன்குணர்ந் தமையாலேதான், கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'கவிதையாம் மணிப்பெயர்க் காதலி' என்றும் `மனைவி யாம் கவிதைத் தலைவி' என்றும் உணர்த்திச் சென்றுள்ளார்.

(மேலைச் சிவபுரி - சன்மார்க்க சபைப்
பொன்விழா மலரில் வெளிவந்தது - 1.12.1958)