50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
7 மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒன்றாகக் குவிந்திருக்கும் இதழ்கள் கட்டவிழ்ந்து, விரிந்து, மணம் பரப்பி நிற்கும் நிலையினைத்தான் மலர்ச்சி என்கிறோம். பூவின் முதல்நிலை அரும்பு எனப்படும். அடுத்த நிலை மொட்டு அல்லது மொக்குள் எனப்படும். அது வளர்ந்து, கட்டவிழும் நிலையில் இருப்பின், போது எனப்படும். வாய் அவிழ்ந்து மலர்ந்த பின் மலர் எனப்படும். இறுதியில் வெதும்பித் தரையில் வீழ்ந்தால் செம்மல் அல்லது வீ எனப்படும். ஒருமுறை மலர்ச்சிக்கு உரியதாகிய பூ, வீயாகி வீழ்ந்துவிடின் மீண்டும் மலர்ச்சி அடைவ தில்லை. அஃதாவது அப் பூவினுக்கு ஒரு மலர்ச்சியே தவிர மறு மலர்ச்சி இல்லை என்பதாம். முதலில் விரிந்து பரவி நின்ற ஒன்று, கால வெள்ளத்தில் சிக்குண்டு இடையில் குவிந்து சுருங்கி, வளங்குன்றி, அது மீண்டும் விரிவடைந்து வளம் பெறுமானால் அந் நிலை, மறு மலர்ச்சி என்னும் பெயருக்கு உரியதாகிறது. குமுகாயத்தின் ஒவ்வொரு துறையிலும் காலப்போக்கில் ஏற்றமும், இறக்கமும், பெருக்கமும், சுருக்கமும், ஆக்கமும், தேக்கமும் மாறிமாறி வருவதை நாம் அறிவோம். ஆகவே, மன்பதையின் கூறுபாடுகளில் அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் முதலிய துறைகள் முதலில் மலர்ந்திருந்து பின்னர், காலப்போக்கில் சுருங்கி மீண்டும் தலைநிமிர்ந்து மலர்ச்சி பெறுவதை மறுமலர்ச்சி என்று வழங்கி வருகின்றோம். எனினும் முதன்முதலாகத் தோன்றிய புதுமையையும் இன்று மறுமலர்ச்சி என்று குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. பண்டைய இயற்கை வளங்களை எல்லாம் படைத்துக் காட்டும் பத்துப்பாட்டு, தொட்டதொட்ட இடமெல்லாம் கவிச் சுவை சொட்டச் சொட்டப் பாடிவைத்த எட்டுத்தொகை, தேனிலே ஊறிய தீஞ்சுவைக் காப்பியங்கள் என இவ்வாறு விரிந்து, மலர்ந்து, மணம் பரப்பி வந்த இலக்கிய உலகு, காலம் செல்லச் செல்ல இதிகாசம் என்றும் புராணம் என்றும் குறுநில மன்னர் களை |