பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்51

மகிழ்விப்பதற்கென்றே பாடப்பட்ட பிரபந்தங்கள் எனப் படும் சிறுநூல்கள் என்றும், தோன்றத் தோன்றச் சுருங்கிக் குவிந்து வரும் நிலையை அடைந்தது. ஆனால், அப்படியே அது சுருங்கிக் குவிந்து விடவில்லை. குவியும் நிலையிலிருந்து மீண்டும் விரியத் தொடங்கியது; மறுமலர்ச்சி அடைய முற்பட்டது.

இலக்கிய உலகின் மறுமலர்ச்சிக்கு இராமலிங்கர், தாயு மானவர், சிவப்பிரகாசர் போன்றவர்களை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். இவர்கள் சமய நோக்குடையராயினும் சிற்சில துறைகளில் கருத்துப் புரட்சியைக் காட்டியவர்கள். சொல்ல வேண்டிய கருத்தைச் செய்யுளில் அமைத்துக் காட்டும் வகையில் புதிய பாங்கைப் புகுத்தியவர்கள். யாப்பு வகைகளிலே எளிய இனிய அமைப்பு முறைகளைச் சிறந்த முறையில் கையாண்டு மறுமலர்ச்சி யைத் தொட்டுக் காட்டியவர்கள். ஆதலின், அவர்களை வழி காட்டிகள் எனத் துணிந்து கூறலாம். இவர்கள் காட்டிய வழியிலே நடந்துவந்து இன்னும் சில படிகளில் முன்னேறி நாடு, மொழி, குமுகாயம் என்றின்னோரன்ன பொருள் களைக் கருவாகக் கொண்டு இனிய ஓசை நயமிக்க பாடல்களைப் பாடித்தந்து, விடுதலை வேட் கையை உண்டாக்கினார் பாரதியார். இவரை மறுமலர்ச்சி இலக்கிய உலகின் விடிவெள்ளி என்றே கொள்ளுதல் பொருந்தும்.

பாரதியை வித்து என்று சொன்னால் அவ் வித்தினின்றும் முளைத் தெழுந்து, அணிதேர்ப் புரவியொடு ஆட்பெரும் படைக்கும் நிழல் நல்கும் ஆலமரம் என்று பாரதிதாசனைச் சொல்லலாம். சுருங்கக் கூறின் பாரதிதாசனை மறுமலர்ச்சி இலக்கிய உலகிலே பேருருக்கொண்டு விளங்கி நிற்கும் ஒளிப்பிழம்பு என்றே கூறுதல் வேண்டும்.

கவிஞன் என்றாலே அவனுக்குத் துணிவு மனப்பான்மை வேண்டும். உண்மையைச் சொல்வதும் நன்மையைச் சொல்வதும் அவன் கடமை. அக்கடமை உணர்ச்சியில் அச்சம் தலைகாட்டவே கூடாது. அதிலும் மறுமலர்ச்சிக் கவிஞன் என்றால் எதற்கும் எவர்க்கும் அஞ்சாத நெஞ்சுரம் வேண்டும். 'அச்சமில்லை அச்ச மில்லை அச்சமென்பதில்லையே' என்பது பாரதியாரின் மனத் துணிவு. பாவேந்தர்க்கு அந்த நெஞ்சுரம் - அந்த மனத்துணிவு இயல்பாகவே வாய்த்திருந்தது. அவருடைய செம்மாந்த தோற்றமே அதற்குச் சான்று. எத்தகைய கருத்தையும் எடுத்துரைப் பதற்கு எந்தச் சூழ்நிலை