பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

யிலும் எவரிடத்திலும் தயங்கினாரல்லர். எவர் தூற்றினும் போற்றினும் அவர் அதைப் பொருட்படுத்துவ தில்லை. ஆனால், அந்த அஞ்சாமை யில் தன்னலம் இராது; பொது நலமே மிளிரும். தீமை இராது; நன்மையே பொலியும். 'நான் செய்ய வேண்டியது என்ன? என்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிர, பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதன்று என்பது பாவேந் தருடைய உட்கிடக்கையாகும். குமுகாயத்தைப் பாழ்படுத்தும் மூடப்பழக்கவழக்கங்களைச் சாடு கின்ற பொழுதும் அரசியலில் பிற துறைகளில் மாறுபட்ட பிற்போக்குக் கொள்கைகளை மறுத்துரைக்கும் பொழுதும் மொழிப் பகையைப் பழித்துரைக்கும் பொழுதும் போர்க்களத்தில் இமையாது நிற்கும் போர் மறவனு டைய உள்ளத்துடன் விளங்குவார். அவர் தம் பாடல் ஒவ்வொன்றும் பாடலில் வரும் சொல் ஒவ்வொன்றும் வில்லி லிருந்து வெளிக் கிளம்பும் கூரிய அம்பாகவே காணப்படும். கடும் வேகத்தோடு சொற்கள் வெளிவரினும் நகைச்சுவையைக் கலந்து குழைத்து வேகத்தின் கடுமை தோன்றாவண்ணம் செய்துவிடுவது இவருக் குள்ள தனிச்சிறப்பாகும்.

மக்களிடையே நெளியும் சாதிப் புழுக்களை அறவே ஒழித்துப் பெண்ணடிமை தொலைத்து, ஆண் பெண் அனைவருமே கல்வி அறிவுடையவராய் விளங்கி, ஒன்றுபட்ட முன்னேற்றமுற்ற குமுகாயம் மலர்தல்வேண்டும். பொருளியலிலே செல்வன், ஏழை என்ற ஏற்றத்தாழ்வு தகர்ந்து, உழைப்பவனுக்கும் இவ்வுலகம் பொதுவுடைமை என்ற எண்ணம் வளர்தல் வேண்டும். அரசியலில் தூய்மையும் நேர்மையும் மலர்தல் வேண்டும்; தமிழ்மொழி தனக்குரிய சிறப்பை மீண்டும் பெற்று உலக மொழிகளில் ஒன்றாக அது மலர்தல் வேண்டும்; கைம்மைக் கொடுமையைக் களைந் தெறிந்து, கட்டாயத் திருமண முறையை முறியடித்து, காதல் மணத்தைக் கடைப்பிடித்துப் பெண்ணுலகு மலர்தல் வேண்டும் என்ற இத்தகைய மறுமலர்ச்சிக் கருத்துகளை மய்யமாக வைத்துப் பாடப்பட்டனவே பாரதிதாசன் பாடல்கள்.

இவர்தம் பாடல்களிலே சொற்சிக்கனத்தைக் காணலாம்; உணர்ச்சி பெருக்கெடுத்தோடுவதைக் காணலாம்; பாநடையில் ஒரு தனி மிடுக்கைக் காணலாம். பாடல்களை நாம் படிக்கும் போது அவை நம் குருதியுடன் குருதியாகக் கலந்துவிடுகின்றன. நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது; சுவைக்கச் சுவைக்க சுவை உணர்வு