மேலோங்குகிறது; அவற்றைப் படிக்கும் போது நாம் பாரதி தாசனாகவே ஆகிவிடுவதும் உண்டு; படிக்குந் தோறும் நாமும் பாடலாமா என்ற நினைப்புத் தோன்றும்; நினைப்பு மட்டுமென்ன? பாடியும் விடுகிறோம்; அதன் விளை வாகத்தான் இன்று நூற்றுக் கணக்கான பாரதிதாசனைத் தமிழகத்தில் காண்கின்றோம்; ஒரு நீண்ட தலைமுறையை (பரம்பரையை)த் தோற்றுவித்த பெருமை பாரதி தாசன் பாடல்களுக்கே உண்டு. "விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்" என ஒரு தனிப்பாடல் கூறும். அந்த விருத்தப்பாவுக்கு ஒரு தனிச் சிறப்பையும் புதுப்பொலிவையும் குறிப்பாக எண்சீர் விருத்தத்துக்கு ஒரு தனி மதிப்பையும் உருவாக்கிய பெருமை இவரைத்தான் சாரும். இயற்கை அழகுகளையெல்லாம் பண்டைய நூல்களிற் சுவைத்து மகிழ்ந்தோம். இடையில் அக் காட்சிகளை முழுமை பெறக் காண இயலாது தவித்தோம். பாரதிதாசன் மீண்டும் அவ்வெழிலோவியங்களையெல்லாம் நமக்குப் படைத்துக் காட்டி யுள்ளார். அவ்வோவியங்கள் புதிய மெருகுடன் ஒளி விட்டுக் காட்சியளிக்கின்றன, 'அழகின் சிரிப்பு' என்னும் நூலிலே! இந்நூல் மொழி பெயர்க்கப்படுமானால் 'நோபெல் பரிசில்' பெறத்தகுதி வாய்ந்ததாகும் என அறிஞர் கூறுவர். கல்வியறிவில்லாத வீடு இருண்ட வீடாகத்தான் இருக்கும். ஆதலின், அறிவென்னும் ஒளி விளக்கினை ஏற்றிவைத்தல் வேண்டுவது தமிழர் கடன் என அறிவுறுத்த வந்த கவிஞர் ஒரு குடும்பத்தைப் படைத்து அக்குடும்ப உறுப்பினர் நடந்துகொள்ளும் முறை களையும் நடத்திக்காட்டி, இல்வாழ்வுக்கே ஓர் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறார், 'குடும்ப விளக்கு' என்னும் நூலின் வாயிலாக. இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் நம் கவிஞர் வல்லவர் என்பதை "இசையமுது" என்னும் பெயர் தாங்கிய நூல்கள் வெளிப் படுத்துகின்றன. இந்நூல்களின் வாயிலாக ஒரு புரட்சியை-மறு மலர்ச்சியை உருவாக்கியுள்ளார். மேட்டுக் குடியினர்தாம் பாடல் களில் உலா வருதல் உண்டு. எளிய வாழ்வினராகிய வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், உழத்தி, ஆலைத் தொழிலாளி, கூடை முறம் கட்டுவோர் என்று இவரனை வரையும் இசையமுதிலே நடமாட விட்டவர் நம் கவிஞர். |