பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

சொல்லின் சிறப்பு

கவிதையானது பிணி, மூப்பு, தளர்ச்சி இவற்றைப் போக்க வல்லது; உலகத் துன்பங்களையெல்லாம் நீக்கவல்லது; தனி உலகிற் செலுத்திப் பேரின்பத்தை ஆக்கவல்லது. இத்தகு பேராற்றல் படைத்த கவிதைக்கு அணி, ஓசை, யாப்பமைவு முதலிய பிறவுறுப்பு களும், கருவிகளேயாயினும், சொற்களே அவற்றுட் சிறந்த கருவிகள் என்பது யாவரும் ஒப்புக்கொண்ட முடிபாகும். சொற்கள்தாம் கவிஞன் கருதிய கருத்தை - உணர்ச்சியை நன்கு புலப்படுத்தும் ஆற்றல் பெற்றன; பயில்வார் தம் உள்ளுணர்ச்சிகளையும் கிளறி விடுவன. சொல் தனியாக நிற்கும்பொழுது அது பொதுவாகப் பொருளுணர்த்துங் கருவியாகவே இருக்கும். ஆனால், அது கவிதையில் இடம்பெறும்பொழுது பிறிதொரு ஆற்றலையும் அழகையும் பெற்றுவிடுகிறது. அதனால் கவிதையில் வரும் சொல் மிகப்பெரியதொரு மதிப்பைப் பெற்றுவிடுகிறது. இம் மதிப்பைக் குறைத்து விடுதல் கூடாது என்பதற்காகவே நூலின் இயல்பைக் கூறவந்த பழம்புலவர் ஒருவர் "வழூஉச் சொற்புணர்த்தல்" பெருங் குற்றமென்றும், "நன்மொழி புணர்த்தல்" நூலுக்கு அழகு என்றும் உணர்த்திச் சென்றார். இந்நன்மையை உணராதார் எளிமை என்ற - பெயரால் கண்ட கண்ட சொற்களை எல்லாம் தொடுத்துப் பாக்களைப் புனைந்துவிடுகின்றனர். இப் புனைவு, சொல்லின் மதிப்பைக் குறைப்பதுடன் அமையாது கவிதைப் பண்பையும் பாழாக்குகிறது. பயில்வோர்க்கு இன்பத்துக்கு மாறாகத் துன்பத் தையே கொடுக் கிறது. இதனால் இயற்சொல்லாயினும் திரிசொல் லாயினும் கவிதை யில், அழகிய - இனிய - நல்ல சொற்களே இடம் பெறுதல் வேண்டும் என்று உறுதியாகின்றது. பாரதியார் பாடலை வியந்து கூறும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் "சொல்லுக்குச் சொல் அழகு ஏறுமேயடா" என்று இசைத்த பகுதி இக் கருத்துக்கு அரண் செய்வதாகின்றது.

சொல்லழகின் வகை

கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகு நோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பது ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லுஞ் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைப்பது மற்றொரு வகை. இதனைச் சொல்நயம் என்பர். ஒருசொல் பல பொருளை