உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். இம் மூன்று வகையானும் சொற்கள் கவிதைக்கு அழகு தந்து நமக்கும் இன்பந் தருவனவாம். ஆயினும், முதல் இரண்டு வகை யாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதைக்கு மிகச் சிறந்தன என்பர் கவிதை இன்பத்தில் திளைக்கும் பெரியோர். முற்காலப் பனுவல்களில் முதல் இரண்டு வகையுமே பெரிதும் பயின்று வரக் காண்கிறோம். அன்று சொல்லிலே உணர்ச்சியை ஏற்றிக் காட்டினர். பின்னரோ சொல்லிலே "ஜாலவித்தை" காட்டுவாராயினர். இனி முற்கூறிய மூன்று வகையான சொல்லழகையும் கவிதை களிலே காண்போம். சொல்லாட்சி ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லைக் கையாளும் சொல்லாட்சிச் சிறப்புக்குத் திருக்குறள் நல்ல சான்று பகரும். இரவச்சம் என்ற அதிகாரத்தில் "இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று" (1067) என ஒரு குறட்பா வருகிறது. இங்கே அழகு தரும் சொல் "இரப்பன்" என்பதேயாகும். திரு வள்ளுவர் தங்கூற்றாகக் கூறுவது இச்சொல். வேறு சில இடங்களிலும் ஆசிரியர் தம்மை உளப்படுத்திக் கூறும் பகுதிகளும் உள. அவ்விடங்களில் 'பெறுமவற்றுள் யாமறிவதில்லை' (61) என்றும், 'யாம்மெய்யாக் கண்டவற்றுள்' (300) என்றும், 'ஒப்பாரி யாம் கண்டதில்' (1071) என்றும் தனித்தன்மைப் பன்மை வாய் பாடாகிய ஆசிரியப் பன்மைச் சொல்லாலே யாம், யாம் என்றே கூறிச் செல்கின்றார். இவ்வாறு குறித்து வந்த வள்ளுவர் இரவச்சம் என்ற அதிகாரத்துக்கு வந்தவுடன் 'இரப்பன்' என ஒருமை வாய் பாட்டால் கூறுகின்றார். வழக்கம்போல இரப்போம் எனப் பன்மைச் சொல்லாற் குறியாது ஒருமைச் சொல்லாற் குறித்த முறையில்தான் கவிதைப் பண்பு மிளிரக் காண்கிறோம். அங் கெல்லாம் ஆசிரியராக இருந்த வள்ளுவர் இங்கே இரவலராகி விடுகிறார். இரவலன் கெஞ்சிக் கேட்கவேண்டுவதுதானே இயல்பு. பெருமிதத்தோடு நின்று கேட்பது தகாது. வள்ளுவரே பிறிதோரிடத்துக் கூறுகிறார் "உடை யார் முன் இல்லார்போல் ஏக்கற்றும்" (395) என்று. ஆதலினால், வள்ளுவரும் இரவலனுக்கு உரிய முறையில் இரங்கிய சொல்லால்-தாழ்ந்த சொல்லால் 'இரப்பன்' என ஒருமையால் கூறுகின்றார். இங்கே ஆசிரியர் இரவலனாகவே அந்தப் பொருளோடு ஒன்றுபட்டு |