62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
விடுகின்றார். இவ்வாறு பொருளோடு ஒன்றுபடுதலாகிய கவிஞனுக் குரிய இயல்பை இச் சொல் அழகுற எடுத்துக்காட்டுகிறது. இடத்துக் கேற்ற சொல்லாகவும் அமைகிறது. சிலம்பில் ஒரு சொல் இனிச் சிலம்பொலி கேட்போம். பேரியாற்றங்கரையில் செங்குட்டுவன் தன் துணைவியொடு அமர்ந்திருக்கின்றான். பாண்டியன் தன் தவறுணர்ந்து இறந்தமை கண்டு மனம் பொறாது கோப்பெருந்தேவி உயிர் நீத்ததையும், கோவலன் குற்றமற்றவன் என வழக்காடி வெற்றிகொண்டு, வஞ்சி சென்று கண்ணகி வானகம் பெற்றதையும் தண்டமிழாசான் சாத்தன் எடுத்துரைக்கக் கேட்ட செங்குட்டுவன், "நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?" எனத் தன் மனைவியை நோக்கிக் கேட்கிறான். மறுமொழி பகரும் இளங்கோ வேண்மாள் "பத்தினிப் பெண்டிர் பெறும் பேற்றைப் பாண்டிமா தேவி அடைவாளாக; நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்" என்கிறாள். இருவருள் யார் சிறந்தோர் என்று விடையிறுக்கவில்லை. கண்ணகியைப் பரசல் வேண்டும் என்று சுருங்கச் சொல்லி விடுகின்றாள். ஏன் அவளை மட்டும் பரசல் வேண்டும் என்ற வினா எழுமல்லவா? வினா எழுமுன்பே கரணியமும் கூறி விடுகின்றாள். நம்முடைய நாட்டுக்குள் வந்தமையால் பரசல் வேண்டும் என்ற குறிப்பை "நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினி" என்னும் அடைமொழிகளால் உணர்த்திவிடுகிறாள். மேலும் இவள் தந்த மறுமொழியில் கடவுள் என்ற சொல்லின் அழகை நினைந்து நினைந்து மகிழ்தல் வேண்டும். அவ்வழகைக் காண்போம். பத்தினியைப் பரசல் வேண்டும். எப்படிப் பரசல் வேண்டும்? கடவுளாக்கிப் பரசல் வேண்டும். கடவுளாக்குதல் என்றால் சிலை எழுப்புதல் வேண்டும். அக் கடவுட் சிலையை எங்கே நிறுவுவது? கோவிலில்தான் நிறுவுதல் வேண்டும்; ஆகவே, கோவில் ஒன்று எழுப்புதல் வேண்டும். கண்ணகிக்கு நினைவுச் சிலை அமைத்து, அதனை நிறுவக் கோவிலொன்று எழுப்பி வழிபடுதல் வேண்டும் என்ற கருத்துகளை எல்லாம் வினாக்கள் பல்கா வகையில் சொல்லிவிடுகின்றாள். வெளிப்படக் கூறினாளா? இல்லை. அவள் உரைத்த 'கடவுள்' என்ற ஒரு சொல் இவ்வளவு எண்ணங்களையும் உண்டாக்கிவிடுகிறது. பத்தினிக் கடவுளை என்பதற்குப் பதிலாகப் பத்தினிப் பெண்ணை என்று கூறியிருப்பின் இந்த |