பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

போன சருகுகளை - நடப்பவர் கால்களைப் புண்படுத்திய முட் களைத்தான் சாம்பராக்குகிறது. புதிய குமுகாயத்தை உருவாக்கப் பயன்படுகிறது. கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்கவும் புதியதோர் உலகம் ஆக்கவும் பயன்படுகிறது.

பகைப்பாட்டு

குயில் பாட்டுப் பாடிய பாரதியார், அக் காப்பியக் குயிலின் உண்மை நிலையறியாது, அதன் நடத்தையை ஐயுற்று, 'நீசக் குயில்' என்று திட்டி விடுகிறார். திட்டினும் பாட்டின் இனிமையில் மயங்கி,

"நீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
      ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே'

என்று கூறி விடுகிறார். 'நீசக்குயில்' 'நெருப்புக்குரல்' எனவும் சினந்து கூறிய அவரே, அதே இடத்தில் 'சுவைக்குரல்' எனவும் 'அமுதூறப் பாடியதே' எனவும் வியந்து மகிழ்கிறார். அது போலவே நம் பாட்டுக் குயிலை - புரட்சிக் குயிலைத் தமிழகமும் 'நாத்திகக் குயில்' என்றது; 'நடுக்குறுத்துங் குரல்' என்றது. எனினும் அதே தமிழகம் அதே சமயம் 'நாம் வளரப் பாடியதே' என்றும் பூரித்தது.

பேராசிரியர் சாமிநாதன் என்பார், 1938இல் 'அனுமான்' இதழில் பாவேந்தர் பாடலைத் திறனாய்வு செய்கிறார். பாவேந் தரின் கவிதைகளிலும் நாடகங்களிலும் குற்றங் குறைகள் கணக் கில்லை என்கிறார். பாட்டுக்குப் பாட்டு கொள்கை முரண்பாடு காணப்படுகிறது என்கிறார். கவிதையென்னும் தீயைப் பக்தி என்னும் எண்ணெய் விட்டு வளர்க்காது, பகுத்தறிவு என்னும் தண்ணீர் வார்த்து வளர்க்கப் பார்க்கிறார் எனச் சாடுகிறார். இன்னும் சில இடங்களில் கிண்டலாக எழுதுகிறார்.

இப்படித் தமது வெறுப்பை - உள்ளக் குமுறலைக் கொட்டி விட்ட பேராசிரியரே, அதே பகுதியில், 'ஆனால் இவையெல்லாம் திவ்வியமான தேன் கூட்டில் பதுங்கிக் கிடக்கும் தேனீக் கொட்டல்' என்றும், 'தமிழ்நாட்டில் இன்று உயிருடன் இருக்கும் கவிகளுள் உண்மைக் கவி யார்? உயிர்க் கவி யார்? சிரஞ்சீவிக் கவி யார்? என்று கேள்விகள் கிளம்பினால், சற்றும் சந்தேகமின்றிப் பாரதிதாசன் என்று ஒரு விடைதான் நம்மால் கொடுக்க முடியும்' என அறுதியிட்டுங் கூறிவிடுகிறார். (க.கு.நெ.கு.பக்.53-54)