பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்69

தேனை எடுத்தால் தேனீ கொட்டாமலா இருக்கும்? கொட்டப் பட்ட பேராசிரியர் தேனின் சுவையை மறந்துவிட வில்லை. வெகுவாகப் பாராட்டுகிறார். எரிச்சல் கொள்ளும் உள்ளங்களும் பாராட்டக் காரணம் என்ன? 1938இல் வ.ரா.என வழங்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் எழுதிய எழுத்து, இதற்கு விடை தருவது போல அமைந்துள்ளது.

"ஆவேசத்தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயிர்க் கவி பாரதிதாசன் என்பது எனது தாழ்மையான எண்ணம். அவர் கையாளும் சொற்களின் எழிலையும் பசையையும் விசித்திரத் தன்மையையும் கண்டு அனுபவிப்பவர்கள் நான் சொல்வதை ஆதரிப்பார்கள்" (க.கு.நெ.கு.பக்.265) என்று எழுதுகிறார். ஆம்; பாவேந்தரின் பாடல்களிலே உள்ள 'பசை' தான் எரியும் உள்ளங் களையும் அருகில் கொணர்ந்து ஒட்டிவிடச் செய்கிறது.

போர் மறவன்

தனி வாழ்வில் எதிர்ப்பு, பொது வாழ்வில் எதிர்ப்பு, இலக்கியத் துறையா? அங்கே எதிர்ப்பு, அரசியல் துறையா? அடாத எதிர்ப்பு, சமயம் சமுதாயம் அனைத்தும் எதிர்ப்பு, இவ்வாறு துறைதோறும் துறைதோறும் எழுந்து வந்த எதிர்ப்புகளே பாவேந்தரைப் போர் மறவனாக மாற்றின. தமிழ், துறைதோறும் அழுத்தப்படுவதும், அது தலைதூக்கினால் எதிர்க்கப்படுவதும், பழிக்கப்படுவதுங் கண்ட பாரதிதாசன் களத்தில் நிற்கும் காளையாக மாறினார்.

"நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
      நலிவதை நான் கண்டே
ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி
      உழைத்திட நான் தவறேன்'

என்னும் பாடலை உன்னிப்பாக நோக்குதல் வேண்டும். தமிழ் நாட்டார் நலிவதைக் 'காணுங்கள்' என்று காட்டவில்லை. 'நான் கண்டேன்' என்று நவில்கிறார். 'உழைத்திட வாருங்கள்' என்று அழைப்பு விடுக்கவில்லை. உழைத்திட 'நான் தவறேன்' எனத் தாமே பொறுப்பேற்கிறார். இவ்வாறு பாரதிதாசன் வாழ்க்கை வேறு, இலக்கியப் பணி வேறு என்று பிரித்துக் காண இயலாத அளவு, இரண்டும் ஒன்றாக ஒன்றிப்போனவர்.