பக்கம் எண் :

72கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

இருவேறு குரல்

தமிழகத்தில் இரண்டு வேறுபட்ட குரல்கள் ஒலிப்பதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாதிகள் இல்லையடி பாப்பா எனச் சாற்றுகிறது ஒரு குரல்; அது சாத்திரங்களுக்கு மாறானது என ஆத்திரங் கொள்கிறது மறுகுரல். பொதுமை காணப் புதுவிதி செய்யப் புகல்வது ஒரு குரல்; எழுதிய விதியை அழிவுறச் செய்ய எவரால் இயலும்? என்பது மறுகுரல். மூடப் பழக்கம் ஓடச் செய்க என்பது ஒரு குரல்; நாத்தழும்பேறிய நாத்திகம் பேசல் தீத்திறம் என்று செப்பிடும் மறுகுரல். அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண் மேல் சொற்றமிழ் பாடு என்று கெஞ்சுவது ஒரு குரல்; வேதம் தந்த வித்தகன் முன்னர் ஓதுவது தமிழா, ஒவ்வோம் ஒவ்வோம் என விஞ்சுவது மறு குரல். இசையோடு தமிழ் பாடு என்பது ஒரு குரல்; இசையிலை தமிழில் என்பது மறு குரல். இருளை அகற்றி ஒளியை நல்கும் குறளே நம்மறை எனக் கூறுவது ஒரு குரல்; வேதம் ஒன்றே மோட்சம் நல்கும் என ஓதுவது மறு குரல். மண்மிசை மாந்தர் வாழும் நெறியைக் கண்முன் காட்டி அழைக்கும் ஒரு குரல்; மண்ணுலகு அநித்தியம், மாயை அகற்றி விண்செல விழைக என்பது மறு குரல். இவ்வாறு வேறுபட்ட இரண்டு குரல்கள் ஒலிப்பது ஒழிந்து ஒரே குரல் ஒலித்தல் வேண்டும்.

அதுவும் தமிழ்க் குரலாக ஒலித்தல் வேண்டும். அக் குரல் கேட்கும்வரை நெருப்புக் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். பனி நடுக்கம் ஒழியும்வரை, தணப்புக் கனன்று கொண்டுதானே இருக்கும்? இஃது இயற்கையின் ஆணை.

இனிப்புக் குரல்

நெருப்புக் குரல் கொடுத்த அதே கறுப்புக் குயில் எத்துணை யோ இனிப்புக் குரல்களும் கொடுத்துள்ளதை நாடறியும், ஒன்றே ஒன்று காண்போம்.

"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா"

என்ற பாடலைத் தமிழகம் கேட்டு மகிழ்ந்ததுண்டு, மயங்கிய துண்டு. அஃது இனிப்புக் குரல் அல்லவா? அமுதக் குரல் அல்லவா? முத்தமிழானது துன்பம் நீக்க வல்லது, இன்பம் சேர்க்க வல்லது என்ற குறிப்பை மிக நயமாகக் குறிப்பிடுவது இப் பாடல். துன்பம் நீக்கவும்