பக்கம் எண் :

82கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"கைம்மை எனக் கூறி - அப்பெரும்
      கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
      நடுவிற் பாய்ச்சுகின்றோம்"

என்று, பெண்கள் நெஞ்சிலே, கைம்மையென்ற வேலைப் பாய்ச்சிப் புண்படுத்துகின்றோமே நாம் என்று "கைம்மைக் கொடுமை' என்ற தலைப்பிற் பாடி வேதனைப்படுகின்றார்.

ஏழு வயதுச் சிறுமி அவள், அப் பெண் மகளின் இளமையைப் பாவேந்தர்

"கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,
     தாவாச் சிறுமான், மோவா அரும்பு"

என அழகாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், அக் குஞ்சு அச் சிறுமான், அவ்வரும்பு திருமணமாகிப் பின் 'தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்' இருக்கிறாள். தந்தையோ தன் மனைவியை இழந்து, மறுமணஞ் செய்து கொண்டு, இன்ப விளையாட்டு விளையாடு கின்றான். இக்காட்சிகளைக் காணுகிறது, அக் கூவத் தெரியாத குயிலின் குஞ்சு. அக் குஞ்சு தந்தையின் எதிரிற் சென்றால், நீ போ என்று புருவம் நெறிக்கின்றான். இந் நிலையில் அக்குழந்தையின் மனக் குமுறலை - வடிக்கும் கண்ணீரைக் " குழந்தை மணத்தின் கொடுமை" என்ற தலைப்பில் வடித்துக் காட்டுகிறார்.

கணவனையிழந்த தன் மகளைக் கண்டு தாயொருத்தி வருந்திக் கூறுவதாகக் 'கைம்பெண் நிலை' என்னும் பாடலில் நம் கவிஞர் தமது வருத்தத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார். 'கண்போற் காத்து வளர்த்த என் மகள் இந் நிலையடைந்தாளே! மணமகன் பிண மகனானான். அதனால் அவள் கைம்பெண் ஆனாள். இனி அவள், திலகமோ குழலில் மலர்களோ அணியின் உலகமே வசைகள் பலவும் புகலுமே! இவள் யார் வீட்டுக்குச் சென்றாலும் தீச் சகுன மென்று காணக் கூசுவரே! மேலும் ஏசுவரே! தரையிற் படுத்தல் வேண்டும்; உண்டி சுருங்கல் வேண்டுமே! மறுமணம் புரிவது சிறுமையென்று கூறுகிறார்களே! அவ்வாறு கூறுவது குறுமதி யென்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்' என்று புலம்பும் தாய்மனத்தில் மகளுக்கு மறுமணம் செய்தல் வேண்டு மென்ற துணிவை அரும்பச் செய்கிறார் கவிஞர்.