பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்81

குமுகாயமே கைம்பெண்களின் நிலைமையைக் கண் விழித்துப் பார்! வேரிலே பழுத்துக் கிடக்கும் இனிய பலாக்கனி, வேண்டுவார் அற்று வீணே கிடப்பதைப் பார்! குளிர்ச்சி நிறைந்த முழுநிலவு, கொடியது என எண்ணப்படு வதைப் பார்! என்று உசுப்பிவிடுகிறார். துயரந் தோய்ந்த இளகிய நெஞ்சிலிருந்து பொங்கி வெளிப்படும் நெட்டுயிர்ப்பு நம் செவியில் விழுகிறது.

தென்றல் உலவும் பூஞ்சோலை சீரற்றுக் கிடக்கிறது. நறிய பூமாலை "சீ"என்றிகழப்படுகிறது. நல்ல கனி நாடத்தகாதது என்றொதுக்கப்படுகிறது. எழில் வீணையின் இசை நஞ்சென்று வெறுக்கப்படுகிறது. பொன்முடி, சூடப்படாமல் மண்ணிற் கிடக் கிறது. தேன் நிறைந்த பொற்குடம் தொடத் தகாததென்று கூறப்படு கிறது. இந்த நாட்டிலே இளங் கைம்பெண்களின் நிலை,

"இவ்வித மாக இருக்குதண்ணே - இதில்
      யாருக்கும் வெட்கமில்லை!"

என்று உணர்ச்சியற்றுக் கிடக்கும் குமுகாயத்தைச் சாடுகின்றார், சாடிய கவிஞர், அக்குமுகாயத்துக்கு வேண்டுகோளும் விடுக்கின்றார்.

இன்பவுணர்வு சுரக்கின்ற இளைய நெஞ்சங்களைக் கைம்மை என்ற குப்பையை இட்டுத் தூர்க்காதீர். அவ்விளமை ஒரு கொழு கொம்பினை நாடும் பொழுது, சாத்திரங்களைச் சான்று காட்டித் தடைகள் செய்யாதீர் எனக் கெஞ்சுகின்றார்.

'காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
      கைம்மையைத் தூர்க்காதீர் - ஒரு
கட்டழகன்திருத் தோளினைச் சேர்ந்திடச்
      சாத்திரம் பார்க்காதீர்'-

என்று கெஞ்சும் முறையில் பணிந்து நின்று கூறுகிறார். எவ்வளவு எடுத்தெடுத்துக் கூறினும் கேளாச் செவியினராகிக் கிடக்கின்ற மக்களையே காணுகின்றார்; மனம் வெதும்புகின்றார்; நிமிர்ந்து நின்று நாட்டையே திட்டுகின்றார்,

"புண்படைத்த என்நாடே கைம்மைக் கூர்வேல்
      பொழிகின்றாய் மங்கையர்மேல்; அழிகின்றாயே''

என்று. கைம்மையைப் பெருகவிட்டால் நாடு அழிந்துவிடுமே என ஏங்குகின்றார்.