பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

களிற்றின் மேற் செம்மாந்து செல்ல வேண்டுமாம்; வேந்தர் நாணச் செல்ல வேண்டுமாம். வேந்தர் நாணும்படி, செம்மாந்து செல்ல விரும்பும் புலவர், எவ்வாறு இகழ்ச்சிக்கு உரியராவர்? சற்றேனும் எண்ணிப் பார்த்தல் வேண்டாவா?

பானையிற் சோறின்றி வறுமையில் வாடிய புலவர், பரிசிலாக யானை வேண்டியது ஏன்? பெருஞ்சித்திரனார் குமணனிடம் வரும் முன்னர், வெளிமான் என்பானிடம் பரிசில் பெறச் சென்றார். அவன் துயின்று கொண்டிருந்தமையால், 'பரிசில் கொடு' எனத் தன் இளவலிடங் கூறினான். அவன் சிறிது கொடுக்கிறான். புலவர் அதனைக் கொள்ளாது சென்றுவிடுகின்றார். சிறிது கொடுப்பின் கொள்ளாப் பெருந்தன்மையையும், தன் பெருமிதத் தையும், பெரிது கொடுப்போர் உலகத்தில் உண்மையையும் வெளிமானுக்கு உணர்த்த வேண்டுமென்னும் நோக்குடன் யானைப் பரிசில் வேண்டுகிறார் புலவர். குமணனும் தந்துவிடுகிறான். அதனைப் பெற்று வந்து, வெளிமானுடைய காவல் மரத்திலே கட்டிவிட்டுக்

"கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
     நெடுநல் யானை எம்பரிசில்" (புறம்-162)

எனக் கூறிச் சென்றுவிடுகிறார். காவல் மரம் என்பது பகையரசர் அணுகாதவண்ணம் காக்கப்படும் மரம். அக் காவல் மரத்தில் 'எமது பரிசிலாக இவ் யானையை வைத்துக் கொள்' என்று கட்டிவிட்டுச் சென்ற புலவரா இகழ்ச்சிக்குரியவர்?

குமணன், யானையொடு வேறு பரிசிலும் தந்து விடுத்தான். அப்பரிசிற் பொருளைப் பெற்று வந்த பெருஞ்சித்திரனார் யாது செய்தனர்? தம் வறுமை நீங்கிற்று; இனி மகிழ்ந்திருப்போம் என்றா எண்ணினார்? அன்று, அன்று. தம் மனைவியை அழைத் தார். "மனைகிழவோயே! குமணன் தந்த இச் செல்வத்தை, உன்னை விரும்பும் மகளிர்க்கும், உன்னால் விரும்பப்பட்ட மகளிர்க்கும், உன் சுற்றத்து மூத்த மகளிர்க்கும், நமது பசி நீங்க நெடுநாள் நமக்கு உதவியோர்க்கும் கொடு; இன்ன தன்மையர் என்று கருதாது கொடு; என்னொடும் சூழாது கொடு; நாம் நன்கு வாழ்வோம் என்று காத்து வையாது கொடு; நீயும் கொடு; நானும் கொடுப்பேன்" என்று வள்ளலாகிவிடுகிறார் புலவர். இத்தகு பேருளங் கொண்டோரை இகழ்ந்து பேச எவ்வாறு துணிகின்றதோ அந்த முற்போக்காளர் நெஞ்சம்!