பெருஞ்சித்திரனார் ஒருமுறை அதியமான் நெடுமான் அஞ்சி யிடம் பரிசில் கருதிச் சென்றார். அவன் அவரையழைத்து உரையாடி அவர்தம் கல்விப் பெருமையறிந்து பரிசில் நல்காது, பரிசில் மட்டும் மற்றவர் வாயிலாகத் தந்துவிடுத்தனன். புலவர் அதனை ஏற்றுக் கொள்ளாது, "காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்" (புறம் 208) எனத் துணிந்து மறுத்து விடுகிறார். இப் புலவர் பெருந்தகைக்குப் பரிசில் முதன்மையன்று; தன்மதிப்பே முதன்மையாகும். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர், குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். வளவன் விரைந்து பரிசில் தாராது காலம் நீட்டித்தான். அப்பொழுது சினந்து அவனிடம் அவர் கூறுகிறார், '`மன்னா, நாற்படையுடைய வேந்தராயினும் அவர் எம்மை மதியாவிடின், அவரை மதித்து வியந்து யாமும் பாடமாட்டோம். சிறிய ஊரையுடைய மன்னராயினும் எம் பெருமையறிந்தொழுகும் பண்புடையோரை யாம் வியந்து பாராட்டுவோம். யாம் எத்துணைத் துன்பம் உறினும் சிறிதும் அறிவில்லாருடைய செல்வத்தை நினை யோம். அறிவுடை யோரது வறுமையை யாம் உவந்து மதிப்போம்" எனத் துணிந்து கூறுகிறார். "மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும் பெருமயாம் உவந்து நனி பெரிதே" (புறம்-197) இத்தகு துணிவாளர்களா பரிசிலுக்காகப் பல் காட்டுவார்கள்? தன்மான மிக்க இப்புலவர் பெருமக்களையா இகழ்ந்து பேசுவது? புலவர் பெருமக்கள் இரந்து வாழும் இயல்பினராகினும் தம் உரிமையையோ தன்மானத்தையோ விட்டுக் கொடுக்காத இயல்பினர். மன்னவன் உயர்ந்தவன்; நாம் தாழ்ந்தவர் என எண்ணாதவர். மன்னரை யொத்த பெருமிதம் உடையவர். அரசர்க்கு அறிவுரை கூறும் அஞ்சா நெஞ்சினர். இப் பண்பு வாய்ந்தோர் பண்டைப் புலவர் என்பதற்குச் சில எடுத்துக் காட்டும் கூறுவேன். |