பக்கம் எண் :

100கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

பிசிராந்தையார் என்ற புலவர் பெருந்தகை பாண்டியன் அறிவுடை நம்பியிடம் செல்கின்றார். சென்றவர் அவனைப் புகழ்ந்து பாடினார் அல்லர். வரி எவ்வாறு தண்டுதல் வேண்டும் என்று அறிவுரை பகர்கின்றார், செவியறிவுறூஉ என்னும் துறைய மையப் பாடுகின்றார்.

"மன்னவனே, ஒருமாவுக்குக் குறைந்த நிலத்தில் விளைந்த பயிராயினும் கவளம் கவளமாகக் கொள்ளின் யானைக்குப் பல நாளைக்கு உணவாகும். நூறு செய்யாக இருப்பினும் யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின், அதன் வாயுட் புகும் உணவை விட அதன் கால்கள் கெடுக்கும் உணவு மிகுதியாகும். அவ்வண்ணமே அறிவுடைய அரசனும் வரி கொள்ளும் நெறியறிந்து கொள்ளின் அவனும் நாடும் தழைக்கும். அவ்வாறின்றித் தானும் சுற்றமும் விரும்பியபடி மக்கள் உளம் வருந்த வரி கொள்ளின் யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்; நாடுங் கெடும்" என்ற பேருண் மையை அவனுக்கு அறிவுறுத்துகிறார். அரசன் அருளை நாடி, அவனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறும் நோக்கம் மட்டும் அவர் கொண்டிருந்தால் அறிவுரையா கூறியிருப்பார்?

குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி, "நீ இவ்வுலகிற் சிறந்த அரசனாக விளங்க விரும்பினும், நல்ல புகழை இவ்வுலகில் நிலைநாட்ட விரும்பினும் ஒன்று கூறுவேன் கேள். மக்கள் உயிர்வாழ உணவு வேண்டும்; அவ்வுணவுப் பயிருக்கு நீர் வேண்டும். ஆதலின், அந் நீரை நிலங் குழிந்த விடத்தே தேக்கி வைக்க அணைகளைக் கட்டு. அவ்வாறு செய்யின் நின் புகழ் நிலைக்கும். செய்யாவிடின் புகழ் நிலைக்காது" என அறிவுறுத்துகிறார். இதனால், மன்னர்க்கு நல்லன கூறி அறிவுறுத்தும் இயல்பினர் அக் காலப் புலவர் என்பது புலனாகிறது. மன்னர் தவறு செய்துழி, ஆண்டுத் தோன்றித் தவறு செய்யாது தடுத்துத் திருத்தியுள்ளனர் புலவர் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன.

அக்கால மன்னர்கள் புலவர்களை மதித்தனர். அதனால், அவர்கள் மொழியும் அறிவுரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி நடந்தனர். புலவர்களை மதித்து நடந்தனர் பண்டைய மன்னர்கள் என்பதை ஒரு மன்னன் கூற்றிலிருந்தே குறிப்பிடுகின் றேன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேற் பகைவர் படையெடுத்தனர். இதனை அறிந்த நெடுஞ் செழியன்