பக்கம் எண் :

எப்படி வளரும் தமிழ்101

வஞ்சினங் கூறுகிறான். எப்படி? "நான் பகைவரை வென்று வாகை சூடேனாகின், மாங்குடி மருதன் முதல்வனாகப் புலவர் பலரும் என் நிலத்தைப் பாடா தொழிக" எனக் கூறுகிறான் என்றால் அக்கால மன்னர், புலவர் மாட்டு எத்தகைய மதிப்பும் அன்பும் வைத்திருந் தனர் என்பது புலனாகின்றதல்லவா?

மோசிகீரனார் என்ற புலவர் பரிசில் பெறுதல் வேண்டிக் காடும் மலையுங் கடந்து, தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும் பொறையைக் காண வருகிறார். அரண்மனைக்குள் களைப்புடன் நுழைகிறார். உள்ளே முரசுகட்டில் முரசமின்றிக் காணப்பட்டது. களைப்பின் மிகுதியால் அதன்மீது அமர்கிறார். கண்ணயர்ந்து விடுகிறார். முரசு கட்டில் வழிபடற்குரியது: எவரும் அதில் அமர்தல் கூடாது. எனினும் புலவர் அயர்ந்துவிடுகிறார். ஆங்கு வந்த அரசன் அதனைக் காணுகிறான். புலவர் எனத் தெரிந்ததும் மன்னன் சினவாது, அவர் துயில் எழும்வரை கவரிகொண்டு வீசி நிற்கிறான். விழித்தெழுந்த புலவர், வியந்து மன்னனை நோக்கி, "மன்னவா, முரசு கட்டிலில் அறியாது ஏறிய என்னை வாளால் வெட்டாது விடுத்த ஒரு செயலே, நீ தமிழ் முழுதறிந்தமைக்குப் போதுமானது"

"அதனொடும் அமையாது, அணுக வந்து நின்
     மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசியோயே" (புறம். 50)

என்று பாடுகிறார். இதனால் புலவர் மாட்டு மன்னர் வைத்திருந்த மதிப்பை நன்குணரலாம்.

அக்காலப் புலவர் உள்ளம் எத்தகு பெருமிதம் வாய்ந்தது என்பதையும் எவ்வளவு இரங்கியருளும் தன்மையது என்பதையும் மற்றப் புலவரை மதிப்பது என்பதையும் காண்போம். இளந் தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர்க்கு வருகின்றான். ஆண்டிருந்த காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, அப் புலவன் ஒற்று வந்தானென்று கருதிக் கொலைத் தண்டனை விதிக்கிறான். இதனையறிந்த கோவூர் கிழார் என்பார் புலவர்தம் இயல்பினைக் கூறி, இளந்தத்தனைக் காப்பாற்றிவிடுகிறார். "வேந்தே, புலவர்கள், பெற்றது கொண்டு மகிழ்பவர்; சுற்றத் தார்க்கும் உதவுபவர்; ஓம்பாது உண்டு மகிழ்பவர்; மனங் கூம்பாது வழங்குபவர்; இத்தகையோரது பரிசில் வாழ்க்கை, நும்மோரன்ன செம்மலும்