108 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
சீமான் வீட்டுப்பிள்ளை எங்கள் ஐயா. தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், கடைசியில் இன்ப மாளிகையும் போய், எல்லார்க்கும் கைகொடுத்த எங்கள் ஐயாவுக்கு ஆயிரம் கஷ்டம் வந்து, உடலும் மனமும் எய்த்து, சாதாரண வீட்டுக்கு மாறிவந்த சில வருடங்களில் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடை பெற்றார்கள். என்றாலும் எங்கள் ஐயா அவர்களின் புகழும், கொடையும், தியாகமும் தேசத்தொண்டும் 'வை.சு.' என்றாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன. எனக்கு மகன் பிறந்து, குழந்தையுடன் நான் சிங்கப்பூர் புறப் பட்ட போது எங்களை வழிஅனுப்ப எங்கள் ஐயா அவர்களும், ஆயாள் அவர் களும் சென்னைத் துறைமுகம் வந்து எங்களை வழியனுப்புகையில் நான் அவர்களைப் பார்த்துப் பார்த்து அழ, பிரியா விடைக்கு அழ, என் ஐயாவின் உடலும், வலுவும் எய்த்துள்ள தற்கு மேலும் அழ, இனி மீண்டும் சிங்கப்பூரிலிருந்து நாம் திரும்பி வரும்போது, பல ஆயிரம் பேருக்கு நிழல் தந்த இந்த ஆலமரம் இருக்குமா என எண்ணி மிக மிகக் குலுங்கி அழ, அந்த நிலையிலும் கண்ணில் நீரைக் காட்டாமல், எங்களைக் கப்பலேற்றியவுடன், எங்கள் ஆயாவுடன் நின்று கொண்டு கைகளை இருவரும் அசைக்க, நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையை அசைக்க, பின்னர்க் கப்பல் மிதக்க ஆரம்பித்த நேரத்தில், கலங்காத எங்கள் தெய்வம் ஐயா அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு கையை ஆட்டி விடை கொடுத்த காட்சி, கடைசிக் கட்டமாகவும் என் வாழ்வின் துக்கத்தின் முதல் கட்டமாகவும் அமைந்து விட்டது. அதன்பின் தாய்நாடு வந்தபோது எங்கள் ஆயாவைத் தனி மரமாகப் பார்த்துத் தவித்தோம். அந்தச் சாதாரண வீட்டில் எங்கள் தெய்வத்தின் மறைவுக்கு வந்த (அப்nது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த) அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் திராவிட கழகத் தூண்களில் ஒன்று சரிந்து விட்ட தாகக் கூறியதை ஆயா எங்களிடம் சொன்னார்கள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், பேரைச் சொன்னால் ஊர் தெரியணும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்தவர்கள் எங்கள் ஐயா. |