28 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
மறுமணம் ஒரு செட்டியார் வீட்டுப் பெண், இளமையில் கணவனை இழந்து விட்டாள். கைம்மைக் கொடுமையை எவ்வளவு நாள்தான் தாங்கிக் கொள்ள முடியும்? இளமையுணர்வுகளை - இயற்கை உணர்ச்சிகளை எத்தனை நாள் கட்டுப்படுத்தி வைக்க முடியும்? மனித உணர்ச்சிக்கு ஆட்பட்ட அப்பெண் ஒருவரை விரும்பினார். மனைவியை இழந்த அவரும் இப்பெண்ணை விரும்பினார். இருவரும் நம் சண்முகனாரிடம் வந்து உண்மையை உரைத்தனர். 'இருவரும் உள்ளன்போடு ஒருவரையொருவர் விரும்புகிறீர் களா?' என வினாவினார். 'ஆம்' - என்றனர். 'அப்படியானால் திருமணம் செய்து கொள்ளுங்கள். பிறரறியாமல் திருட்டுத்தனமாக நடப்பது அயோக்கியத் தனம். பழிச் சொல்லுக்கும் இடமாகும். அதனால் துணிந்து திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது' என்று கூறினார். அப்பெண்ணுக்கு உறவினர் ஒருவர் இவரிடம் வந்தார். சினந்த முகமும் சீறிய பார்வையும் உடையவராகி உள்ளே வந்தார். சண்முகனாரிடம் அப்பொழுது நான் உரையாடிக் கொண்டிருந்தேன். சண்முகனார் வந்தவரை நோக்கி, முறைப்படி 'வாங்க! இருங்க!' என்றார். வந்தவர் அமரவில்லை; வரவேற்புக்கும் மறுமொழி தரவில்லை. 'நான் இங்கே உட்கார வரவில்லை; நீ செய்த அக்கிரமத்தைக் கேட்டுட்டுப் போகத்தான் வந்தேன்' என்றார் வந்தவர். 'அக்கிரமமா? என்ன அக்கிரமம்?' என்று வினவினார் சண்முகனார். 'ஒன்றுந் தெரியாதது போல் பேசுகிறாயே! எங்க குடும்ப கௌரவத்தையே கெடுத்து விட்டாயே! எங்க வீட்டுப் பெண் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டாயே! நீ உருப்படுவாயா?' என்று பொரிந்து தள்ளிவிட்டார். 'அடே! அதைச் சொல்கிறீரா?' என்று கூறிவிட்டு அமைதியாக நிலைமைகளை விளக்கினார் சண்முகனார். வந்தவர் செவிசாய்ப்பதாக இல்லை. 'உன் சமாதானத்தைக் கேட்க வரவில்லை. நீ உருப்படுவாயா? எல்லாத்தையுங் கெடுத்து விட்டாயே!' என்று குதிக்கிறார். |