பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்27

பங்கு கொண்டு வாழ்ந்தார். தீபாவளி முதல் நாள் மாலையில் 'அரிசனங்களை' வீட்டுக்கு வரச்செய்து ஆளுக்கு ஒரு வேட்டியும், துண்டும் கொடுத்து வந்தார்.

நீலாவதி திருமணம்

அக்காலத்தில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.ஏ.கே. கலிய பெருமாள் என்பவரின் மகள் செல்வி நீலாவதி என்பவர் 'திராவிடன்' 'குடியரசு', 'குமரன்', 'ஊழியன்' போன்ற இதழ்களில் சீர்திருத்தக் கட்டுரைகள் எழுதி வந்தார்.

இக்கட்டுரை வாயிலாக நீலாவதியின் அறிவாற்றலை, முற்போக்குக் கருத்துக்களை, பண்பாட்டை உணர்ந்து கொண்ட சொ. முருகப் பனார், இப்பெண்ணைச் செட்டி நாட்டுத் தனவணிக இளைஞர் ஒருவருக்கு மணஞ் செய்து வைக்க வேண்டுமென்று கருதினார். இத்திருமணத்துக்கு இராம. சுப்பிரமணியம் என்னும் இளைஞர் உடன்பட்டார்.

உடனே இவ்வெண்ணம் பெரியார் ஈ.வே.ரா. அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரியார் இசைவுடன் பெண்ணின் தந்தை யாருக்கும் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சில நாள் சிந்தித்து அவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.

"இக் கலப்பு மணத்தால் மணமகன் இராம. சுப்பிரமணியத்துக்குப் பல தாங்க முடியாத இடஞ்சல்களும் எதிர்ப்புகளும் சுற்றத் தார்களாலும் சாதிப் பற்றுடையோர்களாலும் பெரும் அளவில் ஏற்படும் என்பதை முன் கூட்டியே நன்கு தெரிந்த தனால் திரு. சொ. முருகப்பாவும் மற்ற சீர்திருத்த இளைஞர்களும் ஆலோசித்து, ஒரு பாதுகாப்புக் குழு ஏற்படுத்தினார்கள். அவர்கள் தீவிரவாதி களாகவும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாகவும் உணர்ச்சி மிக்கவர்களாகவும் இருந்தனர்"

- எஸ்.ஏ.கே.கே.ராஜு
(நீலாவதி இராம. சுப்பிரமணியன்
வாழ்க்கை வரலாறு)

அப்பாதுகாப்புக் குழுவில் 'கானாடுகாத்தான் வயி.சு. சண்முகம்' ஒருவர். யாரோ நடத்தும் கலப்பு மணத்துக்கு இவர் ஏன் பாதுகாப்புக் குழுவில் பங்கு கொள்ள வேண்டும்? முற்போக்கு முயற்சிகளில் - கலப்பு மணம் பரவ வேண்டு மென்ற ஆர்வத்தில் எவர் ஈடுபடினும் அவரெல்லாம் கேளிரே எனக் கொண்டு வாழ்ந்தவராதலின், பாதுகாப்புக் குழுவில் போர் மறவராக அவர் விளங்கினார்.