முன்னுரை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, செய்யத் தகுவன செய்து, கையகத்துப் பொருளெல்லாம் கரவாது வழங்கி, எவர் மாட்டும் இன்னருள் சுரந்து மீமிசை மாந்தரெனப் பெயர் கொண்டவர் கானாடுகாத்தான் வயி.சு.சண்முகனார். அவர்தம் திருமகளாரும் எனக்குத் தமக்கையெனும் உறவு கொண்டு ஒழுகுபவருமான திருவாட்டி பார்வதி நடராசன் அவர்கள், தந்தை சண்முகனாரின் நினைவாகச் சில அறப் பணிகள் செய்தல் வேண்டுமெனும் பெருவிருப்பால், அவர்தம் பெயர் விளங்க அறக்கட்டளையொன்று நிறுவிக் கல்வி கற்பார்க்கு உதவி வருகிறார். நூல் நிலையம் ஒன்றும் அமைத்தல் வேண்டும் என்பது அம்மை யாரின் பேராவல். அதனுடன் அமையாது, தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்க வேண்டும் என்பதும் அவருடைய விழைவு. அம்மையாரின் எண்ணங்களையும் செயல்களையும் காணுந்தொறும், மகள் தந்தைக் காற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் - என்று திருக்குறட் பாடலை யே மாற்றிப் பாடும்படி செய்துவிடும்! “தம்பி! அப்பாவின் வரலாற்றை நூலாக எழுத வேண்டுமே; அதை நீங்கள்தான் எழுதுதல் வேண்டும்” எனத் தம் விழைவை என்னிடம் ஒரு நாள் வெளிப்படுத்தினர் தமக்கையார். என்னால் உடன்படவும் இயலவில்லை; மறுக்கவும் இயலவில்லை, 1949ஆம் ஆண்டிற்குப் பின்னரே சண்முகனாரின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ஆதலின் முழுமையாக அவர் வரலாறு தெரியாமல், எவ்வாறு எழுத உடன்படுவது? குடும்ப உறவு பூண்டு ஒழுகி வரும் நான் எவ்வாறு மறுப்பது? இருகன்றினுக் கிரங்கும் ஆவின் நிலை பெற்றேன். |