4 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
ஒருவாறு துணிந்தேன், இசைந்தேன், குறிப்புகள் தேடினேன். அறிஞர் பெருமக்கள் எழுதி வைத்த நூல்களிற் சில குறிப்புகள் கிடைத்தன. ஆண்டு மலர்களிற் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்டும் நானறிந்த செய்திகளைக் கொண்டும் எழுதத் தொடங்கினேன். “பார்வதி அம்மையார் வாயிலாகச் சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கேட்டறிந்து எழுதினால், பயனுடையதாக இருக்குமே” யென்று பாவலர்மணி புலவர் ஆ.பழநி ஓர் அறிவுரை கூறினார். இதுவும் நன்றேயென எண்ணித் தமக்கையாரை அணுகினேன். அவரும் இசைந்து, தமது எழுபதாவது அகவையிலும் உடல் நலங்குன்றியிருப்பினும் மெல்ல மெல்ல, நினைந்து நினைந்து, பல குறிப்புகளை வழங்கினார்கள். மேற்குறித்த செய்திகளைக் கருவாகக் கொண்டு, விரிவாக்கி, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சண்முகனார் காலத்துச் சான்றோர்களை அணுகிக் கட்டுரை பெறலாமென விரும்பி முயன்றோம். ஆனால் அவர் காலத்துப் பெருமக்களில் மிகச் சிலரே இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆதலின் அவர்தம் குடும்பத்தினரை அணுகி வேண்டினோம். சான்றோரும் சண்முகனார் தம் குடும்பத்தினரும் கட்டுரை வழங்கினர். அவரையும் நூலுள் இணைக்கப்பெற்றுள்ளன. ஒருவரைப் பற்றியே பலரும் எழுதிய கட்டுரைகளாதலின் வந்த செய்திகளே மீண்டும் மீண்டும் வந்துள்ளன எனக் கொண்டு, கூறியது கூறலெனக் கருதாது விடுக, ஒரு தனிப்பட்ட மீமிசை மாந்தரின் வாழ்க்கை, அவர்தம் குணநலங்கள் பலருக்கும் படிப்பினையாக அமையும் என்பது நாம் கருத்து. காரைக்குடி அன்புள்ள, 19,3-1989 முடியரசன் |