பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

'கிராப்பு' வைத்துக் கொள்வதற்கு, அக்காலத்தில் அவ்வளவு எதிர்ப்பு இருந்தது செட்டிநாட்டில். செட்டி மக்கள் தலையை மழுங்க மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ் வழக்கத்துக்கு மாறாக நம் சண்முகனார் துணிந்து 'கிராப்பு' வைத்துக் கொண்டார். சிறு வயதிலேயே முற்போக்கெண்ணம் அவரிடம் இயல்பாகவே மலர்ந்திருந்தமையால் சமுதாயத்துக்கு அஞ்சாது, எதிர்த்து நின்று, 'கிராப்பு' வைத்துக் கொண்டார்.

மகள் திருமணம்

சண்முகனார் தம் மகள் பார்வதிக்குத் திருமணஞ் செய்து வைக்க நினைத்தார். அதற்குரிய முயற்சியில் ஈடுபட்டார்.

செல்வர்கள் இசையாமை

வயி.சு.ச. குடும்பத்திற்குச் சமமாக இருந்த செல்வர்கள். ஐயர் வைத்து முறைப்படிதான் திருமணம் நடத்த வேண்டும்; சீர்திருத்த முறையில் நடத்துவதானால் நாங்கள் உடன்படோம் என்றனர். சண்முகனாரோ உறுதி கொண்ட நெஞ்சுடையவர். தம் கொள்கை யை விட்டுக் கொடுக்க மறுத்து விட்டார்.

சண்முகனார் பணத்துக்கு முதன்மை தராமல் கொள்கைக்கே முதன்மை தரும் இயல்பினர். அதனால், தமது சமுகத்தில் படித்தவ ராகவும் நல்லவராகவும் தம் கொள்கைக்கு இசைபவராகவும் உள்ள இளைஞருக்குத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து, அதற்காக முயன்றார்.

மணமகன் கிடைத்தார்

காரைக்குடியில், மெ. நடராசன் என்ற பெயருடைய படித்த நல்ல இளைஞர் ஒருவர் கிடைத்தார். இவருக்கே மகளைக் கொடுக்க உறுதி செய்தார். பின்னர் மணமகன், எம்.ஏ., டி.காம்., படித்துப் பட்டம் பெற்றார்.

அவர்கள் குலவழக்கப்படி வைதிக நெறியில் திருமணம் நடத்த விரும்பாத சண்முகனார், தமிழவேள் சர்.பி.டி. இராசன் தலைமையில் நடத்த முடிவு செய்து, திருமண அழைப்பும் அச்சிட்டு, அனை வர்க்கும் அழைப்பிதழ்கள் முறைப்படி அனுப்பி விட்டார்.

பங்காளிகள் எதிர்ப்பு

இராயவரத்திலிருந்த பங்காளிகள், 'இதென்ன! சடங்கு முறைகள் இல்லாத திருமணம்! இதற்கு நாங்கள் வரமாட் டோம்' என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.