பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

அக்குறிப்பில் இடம்பெறும். அவர்தம் இல்லத்தில் குவியல் குவியலாக அந்நாள் குறிப்பேடுகள் குவிந்து கிடந்ததை நாங்கள் கண்டிருக் கிறோம். அக் குறிப் பேடுகள் இப்பொழுது கிடைத்தால் நாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ளத் துணையாகும். அவ்வேடுகள் யாண்டுள்ளன எனத் தெரிந்து கொள்ள இயல வில்லை!

கணக்கில் நேர்மை

நாடோறும் கணக்கெழுதிவைப்பதிற் குறியாக இருப்பார். சில நாளில் இருப்புத் தொகையில் ஐந்து குறையுமாகினும் என்ன செலவு செய்தோம் என்று சிந்தித்துக் கொண்டேயிருப் பார். இரவு எவ்வளவு நேரமானாலும் எழுந்திருக்க மாட்டார். வீட்டார் வந்து, 'நேரமாகிறதே! திட்டக்குறைவு என்று எழுதி விட்டு உறங்கலாமே' என்பர். உடனே அவருக்குச் சினம் வந்து விடும். 'சோம்பேறிப் பயலும் திருட்டுப்பயலுந் தான் திட்டக் குறைவு என்று எழுதுவான். என்னையும் அப்படி எழுதச் சொல்கிறீர்கள்?' என்று வெகுண்டு உரைத்து விட்டுச் செலவான வகையைக் கண்டுபிடித்து, எழுதி விட்டுத் தான் உறங்கச் செல்வார். 'செய்வன திருந்தச் செய்' என்பது கோட்பாடு.

விடாப்பிடி

எதிலும் விடாப்பிடியான குணம் உடையவர். தவறான வற்றில் அவ்வாறு செயற்பட மாட்டார். நல்லனவற்றில் - தமக்குச் சரியென்று தோன்றியவற்றில் - நேர்மையானவற்றில் தான் அவ்வாறு விடாப் பிடியாக இருப்பார். அதனால் எவ்வளவு ஊறுகள் நேரினும் அசைந்து கொடார். இக் கொள்கையினால் பல இழப்புகள் நேர்ந்தன. நேர்ந்தும் இறுதி வரை உறுதியோடு தான் வாழ்ந்தார்.

வளர்ப்புமுறை

மக்களை வளர்க்கும் முறை, மற்றவரினும் வேறுபட்டிருக்கும். அன்பு காட்டுவார்; அப்பொழுது அன்னையாக இருப்பார். கண்டித்துரைப்பார்; அப்பொழுது தந்தையாக விளங்குவார். அறிவுரை கூறுவார்; அப்பொழுது நன்னெறி மொழியும் ஆசானாக மிளிர்வார். கட்டுப்பாட்டை வற்புறுத்துவார்; அப்பொழுது படைத்தலைவராகத் தோற்றம் அளிப்பார். 'இதை இவ்வாறு செய்யலாமா? அவ்வாறு செய்யலாமா?' என்று கலந்துரையாடுவார். அப்பொழுது தோழராக விளங்குவார்.