கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை, உண்மை, பகுத்தறிவு, சிந்திக்கும் ஆற்றல், உதவும் பண்பு, பணிவு, பெருமிதம் இவ்வரும் பெருங் குணங்களை இவரால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடமும் காணலாம். அவர்கள் பெரியவர்களாகிக் குடும்பப் பொறுப்பேற்ற பின்னரும் இன்றுங் காணலாம். திறந்த மனம் மனத்திற் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசுவார். சுற்றி வளைத்துப் பேச மாட்டார்... நேரடியாகப் 'பட்'டென்று கூறும் இயல்பு இவரிடம் உண்டு. இச்சமுகத்தினர், எதனையும் வெளிப் படையாகப் பேசி விட மாட்டார்கள். மறைமுகமாகக் குறிப் பாகவே உணர்த்துவர். அதிலும் திருமணப் பேச்சு முதலியவற்றில், பிடிகொடுக்காமல் வெகு நாகரிகமாகப் பேசுவர். ஆனால் சண்மு கனார் இவற்றிற்கெல்லாம் அப்பாற் பட்டவர். 'வெட் டொன்று துண்டிரண்டு' என்பார்களே அப்படித் தான் இவர் பேச்சு. எடுத்துக் காட்டாக ஒன்று குறிப்பிடுகின்றேன். ஒரு நாள் காரைக்குடிக்கு வந்து, தம் திருமகள் பார்வதி நடராசன் இல்லத்தில் இருந்து கொண்டு, என்னை அழைத்து வரச் செய்தார். சென்றேன். 'வாங்க தம்பி, என் பேத்தி கமலாவுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறேன். உங்களுக்குத் தெரிந்த நல்ல பையன் யாராவது உண்டா?' என வினவினார். திடீரென்று இவ்வாறு வினவியதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. இத்தகைய செயல்களில் எனக்கு அவ்வளவாகப் பயிற்சியும் இல்லை. விழித்தேன். "இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. மெதுவாக எண்ணிப் பார்த்துச் சொல்லலாம்." இவ்வாறு கூறி, என் தடுமாற்றத்துக்கு ஓர் ஊன்று கோலானார். இதற்குள் என் மனக்கண் முன் காரைக்குடி அண்ணன் இராம. சுப்பையா மகன் சுப. முத்துராமன் (திரைப்பட இயக்குநர்) வந்து நின்றார். 'ஐயா, நம் அண்ணன் இராம.சுப்பையா மகன் முத்து ராமனைப் பார்க்கலாமே' என்றேன். |