70 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
'பையன் எப்படி?' - இது சண்முகனார் வினா. நல்ல பையன்; நல்ல பேச்சாளி; ஒழுக்கமான பையன்; ஏவி.மெய் யப்பச் செட்டியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான்; அவரிடம் நல்ல பிள்ளையென்று பெயர் வாங்கியவன் - என்று விடை பகர்ந்தேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்ட சண்முகனார், தம் மகளை அழைத்து, 'உடனே ஆள் அனுப்பி நம்ம விசாலாட்சியைக் (முத்துராமன் தாயார்) கூட்டி வரச் சொல்' என்று ஆணை யிட்டார். சிறிது நேரத்தில் விசாலாட்சி ஆச்சி வந்து விட்டார்கள். வந்து அமர்ந்தவுடன், 'விசாலாட்சி! நம்ம கமலாவை உன் பையன் முத்துராமனுக்குக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?' என்று நேரடியாகக் கேட்டு விட்டார். 'அண்ணன் - நீங்கள் சொல்லும் பொழுது நான் என்ன சொல்லப் போகிறேன். சரி' - என்று ஆச்சியாரும் இசைவு தெரிவித்து விட்டார்கள். திருமணம் நிறைவேறியது. நகரத்தார் குடும்பங்களில், இரண்டே மணித்துளிகளில் (நிமிடம்) திருமணம் பேசி முடித்ததைக் காணவே முடியாது. துணிவுள்ளம் உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை யென்று பாரதி பாடிய பாடல் வரிக்கு இலக்கியமாக - எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஒருவருண்டா? என வினவினால், ஆம்; உண்டு; அவர் தான் வயி.சு. சண்முகம் என்று துணிந்து கூறலாம். சண்முகனார் இல்லத்தை விட்டு வெளியிற் புறப்பட்டால் கைத்துப்பாக்கியின்றிச் செல்ல மாட்டார். ஒரு நாள், வழக்கப் படி கைத்துப்பாக்கியுடன் வெளியிற் செல்ல எண்ணிப் புறப்பட்டு வாயிலுக்கு வந்து விட்டார். அப்பொழுது நண்பர் சிலர் எதிரில் வந்து விட்டனர். வெளியிற் செல்வதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் நண்பர்கள் விடவில்லை. சிறிது நேரம் சீட்டாடி விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்தினர். இவருக்கும் அவ்விளை யாட்டில் விருப்பமுண்டு. வற்புறுத்தலுக்கு இசைந்து விட்டார். சீட்டாடுவது அக்கால இளைஞர்க்கு ஒரு பொழுதுபோக்கு. |