78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
10 வை. சு. சண்முகம் முத்தமிழ்க்காவலர் பெ.கி.ஆ. விசுவநாதம் (சண்முகனாரும் முத்தமிழ்க்காவலர் அவர்களும் ஒரே இயக்கத்தி லிருந்து நெடுநாள் பழகிய வர்கள். தொண்ணூறாம் அகவையில் வாழும் இவ்விளைஞர் ஒரே காலத்தில் வாழ்ந்து, பழகிக் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரையாக - வழக்கம் போற் சுருக்கமாக ஆனால் விளக்க மாகத் தந்துள்ளார்.) நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம் தமிழகத்தில் சிறந்து உயர்ந்து விளங்கும் ஒரு செல்வச் சமூகம், வருந்தி உழைப்பதும், சிக்கனமாக வாழ்வதும், சேமித்த பொருள்களை அறச்செயல் களுக்கு வாரி வழங்குவதும் அவர்களின் கொள்கைகள். இச்சமூகம் இல்லாவிடில் பல திருக்கோயில்கள் சீர்குலைந்து போயிருக்கும். இன்றும் கூட பற்பல திருக்கோயில்களில் திருப்பணிகளும் குட முழுக்கு களும் இச்சமூகத்தினரால் நடை பெற்று வருவதைக் காணலாம். சமயத்தொண்டு மட்டுமல்ல கல்வித் தொண்டிலும் இச்சமூகத்தினர் தலை சிறந்து விளங்குகின்றனர். ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களால் காரைக்குடியில் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி நிறுவனங்களும் இதனை மெய்ப்பிக்கும், பிறரிடம் நன்கொடை பெறாமல் தங்களின் சொந்த வருமானத்தைக் கொண்ட பல்கலைக்கழகங்களையும் பல துறைக் கல்வி நிறுவனங்களையும் தோற்றுவித்த பெருமை இவர்களுக்கு உண்டு. சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வது மட்டுமல்ல. நாட்டுப் பற்றிலும் இச்சமூகத்தினர் சிறந்து விளங்கியவர்கள். |