பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்95

“நன்றே நினைமின்; நமனில்லை” என்ற திருமூலர் வாக்கில் ஒன்றிய ஐயா அவர்களின் பேச்சில் கனிவிருக்கும்; உறுதியிருக்கும்; கம்பீரமும் கலந்திருக்கும்; தோற்றத்தில் எளிமையிருக்கும்; ஏற்றமும் இணைந்திருக்கும். எண்ணத்தில் துணி விருக்கும்; தூய்மை யுடன் தெளிவும் தொடர்ந்திருக்கும்.

தெய்வ பக்தி குறைந்தாலும் மறைந்தாலும் நாடு சிறக்காது. எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது; நிரக்காது. போலிப் பக்தியினால்தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற உறுதியான கருத்து வை.சு.வுக்கு உண்டு.

துன்பங்கள் அணிவகுத்துச் சூழ்ந்த போதும், சுடச்சுட ஒளிரும் பொன் போலத் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக் கையும் குறை யாமல், நெஞ்சுறுதியுடன் வாழ்ந்த பெரு மகனாரின் எண்ணமும் வாழ்வும் நமக்கு வழிகாட்டுமாக.

இனி, ஐயா அவர்கள் என்னை ஆளாக்கிய முறைப் பற்றி இரண்டொன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு வந்து விட்டது. யாரோ, எப்போதோ சொன்னது சடாரென்று நினைவுக்கு வர, நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்லிவிட்டேன்.

அந்த இடத்திற்குத் தற்செயலாக வந்த ஐயா, ‘நல்லதுக்குக் காலமில்லையா? யார் சொன்னது?’ என்று கேட்டுவிட்டு நடந்ததை விசாரித்தார். உடனே ‘நல்லோர் பெரியோர் என்றெண்ணும் காலம் வந்ததே - கெட்ட -நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே’ என்ற பாரதியின் பாடல் வரிகளை, என்னைப் பல தடவை (Imposition) எழுதச் செய்தார்கள்.

ஐயா அவர்கள், இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றிருந்த போது, என்னிடம் ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற குறள் பற்றிப் பேச்சு எழுந்தது.

நான் டாக்டர் மு.வ. எழுதிய ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்ற நூலிற் படித்த ‘பொருளில்லார் இவ்வுலகில் இல்லை’ என்பதைப் பற்றி எடுத்துச் சொன்னேன்.