பக்கம் எண் :

96கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

‘அடடா! அப்படி ஒரு நிலை நாட்டில் ஏற்பட்டு விட்டால் எப்படியிருக்கும்!’ என்று மிக வியந்து மகிழ்ந்தார்கள் ஐயா.

குழந்தைகளாகிய எங்களைப் பாசத்துடனும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்தார்கள். பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை நாள் தோறும் எங்களைப் பாடச் சொல்வார்கள்.

1947 இல் கானாடுகாத்தான் கொரட்டியார் ஊருணி அருகில் அமைந்திருந்த பள்ளியில் முதல் சுதந்திர தின விழா நடைபெற்றது. சிறுவர் சிறுமியர்க்கான பாரதி பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டி முதலியவை நடைபெற்றன.

நானும் கூட்டத்தில் இருந்தேன். நான் அஞ்சிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நமக்கோ குரல் வளம் இல்லை; ஐயா நம்மைப் பாடச் சொல்லாமல் விடப் போவதும் இல்லை என்று தயக்கத்துடன் ஒதுங்கியிருந்தேன். நான் எதிர் பார்த்த படியே நடந்து விட்டது.

விடுதலை! விடுதலை!! விடுதலை!!!

என்ற முழுப் பாடலையும் (எனக்குரிய குரல் வளத்துடன்) பாடினேன். வீட்டுக்குத் திரும்பி வந்த ஐயாவுக்கோ பெரு மகிழ்ச்சி.

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே”

“வெற்றி எட்டுத்திக்கும் எட்டக்கொட்டுமுரசே”

போன்ற பாரதி பாடல்களை ஊர்ப் பிள்ளைகள் பலர் பாடினாலும் ‘விடுதலைப்’ பாட்டைப் பொருத்தமான நேரத்தில் இவன்தான் பாடினான் என்று என்னைப் பாராட்டிச் சொன்னார்கள்.