பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்101

சொல்லிக் கடவுளை வழிபாடு செய்யும் புதிய வழக்கத்தை உண்டாக்கினான்.37 மந்திரம் என்பது வடமொழி மந்திரம். சேர நாட்டில் இவனது காலத்திற்கு முன் அரசாண்ட இவனது முன்னோர்களில் சிலர் பார்ப்பார்க்கு உயர்வு தந்து வேள்வி செய்தார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. எனினும், அவர்கள் பார்ப்பனரைக் கடவுளுக்கு மந்திரம் சொல்லும்படி செய்து தாம் பின்னின்று வழிபாடு செய்யவில்லை. இவன்தான் அந்த நிலையை முதன் முதலில் உண்டாக்கியவன் போலும்.

மந்திரம் என்பது வடமொழி மந்திரம் அன்று. திருமந்திரம் என்னும் வழக்கினைக் கொண்டு தமிழில் மந்திரம் இருந்தது என்றும். அதுபோன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லிக் கடவுள் வழிபாடு செய்ய இவன் ஏற்பாடு செய்தான் என்றும் கொள்ளலாம். எப்படியாயினும் இவனது காலத்திலேதான் கோயிலில் மந்திரம் சொல்லும் வழக்கம் தோன்றியது என்றும், அதற்கு மக்கள் தம் விருப்பம்போல் தாமே கடவுளின் முன்பு நின்று தம் குறைகளைப் போக்க வேண்டிக் கொண்டனர் என்றும் கொள்ள வேண்டி வரும்.

எது எப்படி ஆயினும் இவன் காலத்தில்தான் வழிபடுவோன் சார்பில் மற்றொருவன் நின்று கடவுளை வேண்டும் இடைத்தரகு நிலை தோன்றியது என்று எண்ணும்படி வரலாற்றுச் சான்று அமைந்துள்ளது.

இன்னிசை முரசு

செங்குட்டுவனின் பாட்டன் உதியஞ்சேரல் ‘இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். அதுபோலவே, இவனும் ‘இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். பொதுவாக மணமுரசு, மறமுரசு, கொடை முரசு என முரசு முழக்கத்தைப் பொருட்பயன் நோக்கிப் பகுத்துக் காட்டுவது வழக்கம். ஆனால், இங்குக் கூறப்பட்ட ‘இன்னிசை முரசு’38 என்னும் தொடர் இசைத்தன்மையை நோக்கி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முத்தமிழில் ஒன்றாகிய இசையை, முரசு முழக்கி இசைவழிப் போற்றியதால் இவன் இவ்வாறு அழைக்கப்பட்டான்.


37. ௸. பதி. 9 : 10

38. பதிற். பதி. 9 : 17