பக்கம் எண் :

102மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

செங்கோலாட்சி

இவனது ஆட்சி ‘மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்’ என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.39 இதனால் இவன் மக்களைப் போலவே பிற உயிரினங்களையும் மாண்புடன் காத்துச் செங்கோலோச்சி வந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது செங்கோலாட்சியால் நாட்டுவளம் பெருகிற்று என்றும் கூறப்படுகிறது.

தோற்றம்

இவன் குதிரைமேலும் யானைமேலும் உலாச் சென்ற காட்சி மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது.

மனைவியின் மாண்பு

ஒளிபொருந்திய நெற்றி, நீண்ட கண்கள், சீவிப்படிந்த கறு கறுத்த தலைமுடி, அழகே உருவான முகம், வண்டுகள் மொய்க்கும் கூந்தல், காதிலே குழை, கையிலே ஒளிரும் வளையல் முதலானவற்றுடன் இவனது மனைவி பொலிவுடன் விளங்கினாள். அவள் பெருந் தகைமைப் பண்பு உடையவள். அந்தப் பண்புக் கேற்ப அவளது வாயிலிருந்து வரும் மொழிகள் எப்போதுமே மென்மையானவையாய் விளங்கின. அதாவது, அரசி என்ற ஆணவச் சொற்கள் அவளது வாயிலிருந்து வரவில்லை. கொள்கையில் அடக்கமுள்ளவளாயும் கணவன் தன் அகவாழ்வில் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது தன் கடமையைச் செய்யும் ஆறிய கற்பு உடையவளாயும் அவள் விளங்கினாள்.40 இவளது கற்பு (அருந்ததி) மீனொடு ஒப்பு வைத்து எண்ணக்கூடிய அளவுக்குச் சிறந்தது என்றும் கூறப்பட்டது. தெளிவான இவளது நற்பண்பின் புகழ் ஓங்கியிருந்தது.41

இவளைச் சுற்றி ஆயத்தார் எப்போதும் இருந்தனர். அவர்கள் ஒளிமிக்க அணிகலன்களை மிகுதியாக அணிந்திருந்தனர். இவளும் மார்பில் சந்தனம், நெற்றியில் பொட்டு, பூமாலை, கச்சுப் போன்ற பூண்வகைகள், மணி பதித்த அணிகலன்கள் முதலானவற்றை அணிந்துகொண்டு பொலிவுடன் விளங்கினாள்.

பாவைபோல் அழகிய ஆயத்துப் பெண்களுக்கு நடுவே, ஓவியம்போல் சிறப்பாகக் கட்டப்பட்ட அந்தப்புர மாளிகையில் இவள் வாழ்ந்துவந்தாள்.


39. பதிற். பதி. 9 : 16

40. பதிற். 90 : 48 - 50

41. ௸ 89 : 19