| 106 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
போர்களையும் ஒப்புநோக்கி எண்ணிப் பார்க்கும்போது அந்துவன் கால்வழி அரசர்களின் செல்வாக்குப் படிப்படியாக உயர்ந்தும் தாழ்ந்தும் வந்திருப்பதை நாம் காண முடியும். அந்துவன் சேரல் இரும்பொறை கருவூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தவன் என்பது மட்டும் தெரிகிறது. இந்தக் கருவூர் கொங்கு நாட்டுக் கருவூர். கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்கொண்ட அரசன் முதன்முதலாகக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து சேரர் ஆட்சியை நிலைநாட்டினான் என்று அவனது பெயரால் தெரிகிறது (பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்). இந்தக் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை அடுத்தோ சில தலைமுறைகளுக்குப் பின்போ அந்துவன் சேரல் அரியணை ஏறிக் கருவூரைச் சேர்ந்த ஒரு சிறு நாட்டுப் பகுதியை ஆண்டுவந்தான். இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்தில் நாடு பெரிதும் விரிவு உடையதாகக் காணப்படுகிறது. இவனுக்குப் பின் அரியணை ஏறிய பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் செல்வக்கடுங்கோவின் ஆட்சியின்கீழ் இருந்த நாட்டுப் பகுதிகள் சிலவற்றில் போர் மூண்டிருக்கிறது. எனவே, இவனுடைய நாட்டுப் பரப்புச் சற்றுக் குறைந்து போயிற்று எனத் தெரிகிறது. இவனுக்குப் பிறகு இவனது மகன் இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் முன்பு இல்லாத அளவுக்கு நாடு மிகப்பெரிய பரப்புடைய தாக விளங்கி இருந்தது. இவனது பெரியப்பன் பெருஞ்சேரல் இரும் பொறை, அதியமானோடு கூட்டுச் சேர்ந்து தன்னை எதிர்த்த சோழரை யும் பாண்டியரையும் வென்றான். இவனோ தனித்த முறையில் கோப்பெருஞ்சோழன் என்னும் சோழ அரசனோடும் இளம்பழையன் மாறன் என்னும் பாண்டிய அரசனோடும் போரிட்டு வெற்றி பெற்றிருக் கிறான். இந்த வகையில் இவனது நாடு மிகப்பரந்த எல்லையை உடையதாக விளங்குகிறது. இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் நாடாண்ட சேர அரசன் யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை நமக்குக் கிடைக்காமல் போன 10ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் இவனுக்குப் பின் அரியணை ஏறி அரசாண்டிருக்கலாம். இவனை அடுத்துச் சேர நாடு சிதறுண்டு பல குறுநில மன்னர்களின் ஆட்சிக்குக் கீழோ சேர அரசர்கள் பலரது ஆட்சிக்குக்கீழோ வந்திருக்கலாம். |