பக்கம் எண் :

126மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

அமையவேண்டும் என்றும் அவர் வரையறை கூறியிருந்தார். அவர் கூறியபடி ஓரம்போகியார் மருதத்திணைப் பாடல்களைப் பாடினார். அம்மூவனார் நெய்தல், கபிலர் குறிஞ்சி ஓதல் ஆந்தையார் பாலை, பேயனார் முல்லை என்ற முறையில் பிற திணைக்குரிய பாடல்களும் பாடப்பெற்றன. அவை கூடலூர் கிழாரால் தொகைநூலாக உருவாக்கப் பட்டன. தலைப்புக்குப் பத்துப் பாடல், திணைக்குப் பத்துத் தலைப்பு என்ற நிலையைக் காணும்போது இது திட்டமிட்டுப் பாடிய தொகுப்பு நூல் என்பது புலனாகிறது.

சேரல் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

விளங்கில் வெற்றி

விளங்கில் என்பது மாடமாளிகைகள் நிறைந்த ஊர். ‘தெற்றி’ என்னும் ஒருவகை விளையாட்டு அங்குள்ள மக்களுக்குச் சிறப்பு விளையாட்டாகும். இவன் அந்த ஊரைத் தாக்கினான். அதன் சிறப்புகளைத் தன் வாட்படை கொண்டு அழித்தான்.1

காலம்

இவன் தனது விளங்கில் வெற்றியைப் புலவர் ஒருவர் நன்கு சிறப்பித்துப் பாடவேண்டும் என்று விரும்பினான். கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துப் பத்துப்பாடல்கள் பாடியது அவன் நினைவுக்கு வந்தது. அப்போது கபிலர் இல்லை; இறந்துவிட்டார். அவர் இருந்தால் நலமாயிருக்குமே என்று எண்ணி ஏங்கினான். இந்த ஏக்கத்தை நிறைவுசெய்யப் பொருந்தில் இளங்கீரனார் என்ற புலவர் தாமே முன்வந்தார். கபிலரைப்போல் இவர் இவன்மீது பத்துப் பாடல்கள் பாடி யிருக்கக்கூடும். பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் ஏதோ காரணத்தால் இதை விட்டிருக்கக்கூடும்.

இவன் தன் காலத்தில் கபிலர் இல்லை எனக் கூறுவது இவனது காலத்தை வரையறுக்க உதவி செய்யும். செல்வக் கடுங்கோவை அடுத்து அரியணையேறியவன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவான். சேரல் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இந்தப் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய அரிசில்கிழாரைப் பற்றி எண்ணவில்லை.


1. புறம். 53 : 3-5