பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்125

ஆட்சி

இவனது நாட்டு மக்கள் சோறு ஆக்கும் தீ அன்றி வேறு தீ அறியார்; வெயில் அல்லது வேறு சூடு அறியார்; வானவில் அன்றிக் கொலை வில் அறியார்; உழுபடை அன்றிக் கொல்படை அறியார். இவன் நாட்டு மண்ணைக் கருவுற்ற பெண்கள் விரும்பி உண்ணுதல் அன்றிப் பகைவர் கொள்ளார். இவனது கோட்டையிலே அம்புகள் பயன்படுத்த வாய்ப்பின்றிக் கிடந்தன. நாட்டிலே அறம் தூங்கியது. மக்களுக்கு நல்ல நிமித்தம் கெட்ட நிமித்தம்பற்றிக் கவலையே இல்லை.8 விறுவிறுப்பு இல்லாத அமைதியான இன்பமான வாழ்க்கையாகும். இவன் பாதுகாக்கும் நாடு தேவர் உலகம்போல் இன்பத்தையே துய்த்தது.

முன்னோர் ஆட்சி

குமரி முதல் இமயம் வரை மேற்கிலும் கிழக்கிலும் இரு கடல்களுக்கிடையில் ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இவனது முன்னோருக்கு வழிமொழிந்து வாழ்ந்தனர். இவனது முன்னோர் கொடியவற்றை நீக்கிச் செங்கோலோச்சினர். காடுகளைத் திருத்தி விளைநிலமாக்கினர்.9

பண்பு நலம்

கடலின் ஆழம், நானிலத்தின் பரப்பு, திசையின் நீளம், வானத்தின் உயரம் இவற்றையெல்லாம் அளந்துவிட்டாலும் இவனது அறிவு. ஈரம், இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க முடியாது என்று கூறுவதால்10 இவன் நல்ல பண்பாளன் என்பதை அறியலாம்.

ஐங்குறுநூறு தொகுப்பித்தல்

அகத்துறையில் அரிய நூல் ஒன்றைத் திறமையாளர்களைக் கொண்டு உருவாக்க வேண்டுமென்று இவன் விரும்பினான். அறிவில் சிறந்து விளங்கிய புலவர் கூடலூர்கிழாரிடம் அப் பணியை ஒப்படைத்தான். அவர் ஐந்து திணைகளையும், ஐந்து புலவர்களிடம் பகிர்ந்தளித்தார். ஒவ்வொருவரும் 100 பாடல்கள் பாடவேண்டும் என்றும் அந்த நூறும் பத்துப் பத்தாகத் தனித் தனித் தலைப்பின்கீழ்


8. புறம், 20 : 7 - 21

9. ௸ 17 : 1 - 8

10. ௸ 20 : 1 - 6