பக்கம் எண் :

128மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இறந்த நாள்

மேழ ஓரை, கார்த்திகை நாள் அந்த நாளின் முதல் கால் பகுதியாகும். அது பாதி இரவாகும். முடப்பனையின் (அனுடம்) நிலை அடி வெள்ளி, கடைக்குளத்தின் (புனர்பூசம்) நிலை கடை வெள்ளி. இந்த எல்லையில் பங்குனி மாதத்து முதல் பதினைந்து நாளில் உச்சம் உத்தரமீன், அந்த உத்தரமீன் உச்சியிலிருந்து சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாம் மீனாகிய மூலம் அதற்கு எதிரே எழுந்தது. அந்த உத்தரத்திற்குமுன் எட்டாம் மீனாகிய மிருகசீரிடம் துறையிடத்தே தாழ்ந்தது. அப்போது ஓர் எரிமீன் கீழ்த்திசையிலோ வடதிசையிலோ செல்லாது நிலத்திற்கு விளக்காக விழுந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த ஏழாம் நாள் அவன் இறந்தான்.2

மேலே தனித்தனியே கண்ட வரலாற்றில் வரும் செய்திகள் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக உள்ளன. அன்றியும் குறுங்கோழியூர் கிழாரால் பாடப்பட்ட மூன்று பாடலுக்கு நான்கு வகையான தொடர் அமைப்புகள் உள்ளன. எல்லாமே புறநானூற்றைத் தொகுத்தவரால் குறிப்பிடப்பட்டவை. எனவே, நால் வேறு பெயர்களில் கூறப்பட்டுள்ளவரும் ஒருவனே எனக் கருதலாம்.

வானவன்

வானவன் யார்? ஒருவனா? பலரா? என்பனவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அவனது செயல்களையும் இருப்பிடங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.1

இமயத்தில் வில் பொறித்தவன்

வஞ்சி நகரில் இருந்த வானவன் ஒருவன் இமயத்தில் வில்லைப் பொறித்தான்.2 இவன் ‘மாண்வினை நெடுந்தேர் வானவன்’ என்று கூறப்பட்டுள்ளான். இந்த வானவனுக்கும், சோழ அரசன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கும் போர் நடந்தது. வஞ்சி நகரில் நடந்த அந்தப் போரில் இந்த வானவன் மாண்டான். வஞ்சி நகரம் வருத்தத்திற்கு உள்ளாகியது.


2. புறம். 229 : 17

1. அகம். 33 : 14, 77 : 15, 143 : 10

159 : 15, 213 : 15, 309 : 10, 381 : 12

2. புறம். 39 : 15 - 17, 126 : 14