பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்129

இமயத்தில் வில்லைப் பொறித்தவன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர அரசன் ஆவான். இந்தச் செயலில் அவனுக்குத் துணையாக இருந்தவர்கள் இருவராவர். ஒருவன் அவனது மகன் செங்குட்டுவன்; மற்றொருவன் அவன் காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசனாவான்.3

நெடுஞ்சேரலாதன் (வேல்பஃறடக்கை) பெருநற்கிள்ளியோடு போரிட்டு இறந்தான். எனவே, இங்குக் குறிப்பிடப்பட்ட வானவன் செங் குட்டுவனாகவோ, மாந்தரஞ்சேரல் இரும் பொறையாகவோ தான் இருக்க முடியும்.

செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைத்தபின் துறவு பூண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. எனவே, கிள்ளிவளவனோடு போரிட்டு இறந்தவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது தெளிவாகிறது. இந்தக் கருத்தை மேலும் சில சான்றுகள் உறுதி செய்கின்றன.

வானவன் கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தான்4 மாந்தரஞ்சேரல் கொல்லிமலை நாட்டைத் தாக்கிப் போரில் வென்று அங்குத் தங்கி அரசாண்டபோது குறுங்கோழியூர்கிழார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார்.5 இவை வானவன் என்று குறிப்பிடப்படுபவனும், மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த வானவனின் படைத் தலைவன் பிட்டன் ஆவான்.6 மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு ‘மாந்தரம்பொறை கடுங்கோ’ என்னும் பெயரும் உண்டு.புகழூரில் உள்ள சங்ககாலத்துக் கல்வெட்டு கடுங்கோ அரசனையும்.7 பிட்டனையும் குறிப்பிடுகிறது. எனவே,


3. ௸ 39 : 14 - 10

4. அகம். 33 : 14, 213 : 15

5. புறம். 22

6. அகம். 77 : 16, 143 : 12

7. இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆவான். இவன் ஒன்பதாம் பத்தின் தலைவனாகிய இளஞ்சேரல் இரும் பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையே ஆவான்; எட்டாம் பத்தின் தலைவனான பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி ஆவான். இவன் குட்ட நாட்டில் சிறப்புப் பெற்றுப் பொறையர்குடி அரசனாய் விளங்கியது போலச் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை குடநாட்டில் சிறப்புற்று விளங்கிய பொறையர்குடி அரசன் ஆவான்.