பக்கம் எண் :

130மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

வானவன் என்பவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையே என்பது கல்வெட்டுச் சான்றாலும் உறுதி செய்யப்படுகிறது.

இவனைச் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன் என்று அந்தச் சங்ககாலக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

செல்வக்கடுங்கோவின் மக்கள் இரண்டு பேர், ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை (தகடூரை வென்றவன்). அவன் எட்டாம் பத்தின் தலைவனாவான்.8 மற்றொருவன் குட்டுவன் இரும்பொறை. இவன், ஒன்பதாம் பத்துத் தலைவனின் தந்தை ஆவான்.9 மாந்தரஞ் சேரல் தொண்டி நகரில் போர் தொடுத்து வென்று அங்கும் சில காலம் தங்கி அரசாண்டான்.10 தொண்டி, குடநாட்டில் இருந்த துறைமுகம். குடநாட்டை அடுத்திருந்த குட்டநாட்டில் இவன் முதன்முதலில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினான் எனல் பொருந்தும். இதனால் இவன் குட்டுவன் இரும்பொறை என்றும் கூறப்பட்டான். இவற்றை யெல்லாம் ஒன்றுசேர்த்து எண்ணும்போது குட்டுவன் இரும்பொறை, மாந்தரஞ்சேரல் இரும்பொறை, வானவன் என்ற பெயரால் குறிப்பிடப் படுவோர் அனைவரும் ஒருவரே என்று ஐயம் திரிபு இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். இவன் பதிற்றுப்பத்து எட்டாம் பத்துத் தலைவனின் தம்பியாவான். சங்ககாலக் கல்வெட்டு இவனைப் ‘பெருங்கடுங்கோ’ என்று குறிப்பிடுகிறது என்பதைக் கண்டோம். இந்தப் பெருங்கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ வஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தவன் என்பதை அவனது வரலாற்றால் அறியலாம்.11 வானவன் வஞ்சி நகரில் இருந்து கொண்டு அரசாண்டதும் இதுவும் ஒன்றாய் அமைந்து இவர்களுடைய வரலாறுகள் எல்லாமே ஒன்றுக்கொன்று எள்ளவும் முரண்பாடு இல்லாமல், குழப்பம் இல்லாமல் தெளிவாய் அமைவதைக் காண்கிறோம்.

இந்த முடிவுகள் எல்லாம் மேலும் ஆய்வுக்குரியவை. சோழ அரசர் இருவரோடு இவன் போராடினான். முதலில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போரிட்டுத் தோற்றான்.12 பின்பு, கிள்ளிவளவனோடு போரிட்டு மாண்டான்.13


8. பதிற். பதி. 8 : 10

9. ௸ 9 : 1

10. புறம். 17 : 13

11. ௸ 11 : 5 - 7

12. ௸ 125 : 16

13. ௸ 39 : 16 - 17