பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 131 |
குடகடலில் நாவாய் ஓட்டல் தொண்டி, மாந்தை ஆகிய மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இவனுக்கு உரித்தாயிருந்தன. இவன் கடல் வாணிகத்தில் கவனம் செலுத்தினான். இவனது கப்பல்கள் அரபிக்கடல் வழியே மேலை நாடுகளுக்குச் சென்று பொன்னைக் கொண்டு வந்தன. கப்பல் வாணிகத்தில் இவனோடு போட்டியிட எவராலும் முடியவில்லை. எனவே, இவனது கப்பல்கள் வாணிகத்தில் ஈடுபட்டதிலிருந்து அரபிக்கடலில் பிறரது கப்பல்கள் செல்லவில்லை.14 கொடைத் தன்மை யாழ் இசையில் வல்ல ‘கோடியர்’ எனும் மக்கள் இவனை நாடிச் சென்றனர். அவர்கள் இவனிடம் பரிசில் பெற்றார்கள் எனலாம்.15 சிறப்புப் பெயர்கள் ‘வெல்போர் வானவன்’16, நற்போர் வானவன்’17 ஆகிய தொடர்கள் இவனது போர் ஆற்றலையும், வெற்றியையும் உணர்த்துகின்றன. ‘சினமிகு தானை வானவன்’18, ‘பொருந்தார் முனையரண் கடந்த வினைவல் தானை வானவன்’19 ஆகிய தொடர்கள் இவனது படையின் ஆற்றலை விளக்குகின்றன. ‘வில்கெழு தடக்கை ... ... வானவன்’20 ‘பெரும்படைக் குதிரை ... ... வானவன்’21ஆகியவை இவனது போர்க்கோலத்தைக் காட்டுகின்றன. ‘தேனிமிர் நறுந்தார் வானவன்’22 ‘நெடுந்தேர் வானவன்’23 ஆகியவை இவனது தோற்றப் பொலிவை நன்கு புலப்படுத்துகின்றன.
14. ௸ 126 : 14 - 16 15. அகம். 309 : 9 16. ௸ 33 : 14, 143 : 10, 159 : 15, 213 : 15 17. ௸ 309 : 10 18. புறம். 126 : 14 19. அகம் 381 : 13 - 15 20. ௸ 159 : 15 21. ௸ 309 : 10 22. ௸ 381 : 15 23. புறம். 39 : 16 |