பக்கம் எண் :

152மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சிறிய தந்தை (பல்யானைச் செல்கெழு குட்டுவன்)

சேரன் செங்குட்டுவனின் தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியொருவன் இருந்தான் என்று முன்னமே கூறினோம். அவன் பெயர் பல்யானைச் செல் கெழு குட்டுவன் என்பது. அவன் செங்குட்டுவனின் சிறிய தந்தை. அவன்மீது பாடப்பட்டது 3ஆம் பத்து. அவன் கொங்கு நாட்டுப் பகுதியை வென்றான்.

மாகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல் கெழுதானை வெருவரு தோன்றல்

என்பதனால் (3-ஆம் பத்து 2 : 15-16) இதனை யறியலாம்.

மதில் அரண் உடைய அகப்பா என்னும் நகரத்தை இவன் வென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தினான்.

துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிற் றூங்குபு தகைத்த
வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிறையப் பதணத்து
அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா வெறிந்த
பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ

(3-ஆம் பத்து 2 : 21-27)

இதனையே, ‘அகப்பா எறிந்து பகற்றீ வேட்டு’ என்று பதிகம் கூறுகிறது.

இவனிடம் பல யானைப் படைகள் இருந்தன. அதனால் இவன் கோட்டைகளை யெளிதில் வென்றான்.

அமர்கோள் நேரிகந்து ஆரெயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்

(3-ஆம் பத்து 9 : 13-14)

கொங்கு நாட்டைப் பிடிப்பதற்கு முன்பு இவன் உம்பல் காட்டைக் கைப்பற்றினான் (உம்பல் - யானை). உம்பல் காடு என்பது இப்போது யானைமலை என்று வழங்கும் பிரதேசம். இது, சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் உள்ளது. உம்பல் காட்டையும் கொங்கு