| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 151 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான் என்று கூறப்படுகிறான். இவன் எப்படி இறந்தான் என்பது கூறப்படவில்லை. ஆனால், இவன் சோழ அரசனுடன் போர் செய்து போர்க்களத்தில் இறந்துபோனான் என்னும் செய்தியை வேறு இடத்தி லிருந்து அறிகிறோம். இவன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்தான். அந்த போர், போர் என்னும் இடத்தில் நடந்தது. அப்போரில் இருதரத்து வீரர்களும் யானைகளும் குதிரை களும் மாண்டனர். அன்றியும் இரண்டு அரசர்களும் புண்பட்டுப் போர்க்களத்திலேயே விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட கழாத்தலையார் என்னும் புலவர் மறக் களவழி பாடினார் (புறம் 368). அந்தப் பாட்டின் கீழ்க் குறிப்பு, `சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது, வீழ்ந்தார் அழுங்கத் தன்னதாக உயிர்போகாது கிடந்தானைக் கழாத் தலையார் பாடியது’ என்று கூறுகிறது (இதில், வீழ்ந்தார் அழுங்க என்பதற்கு நண்பரும் உறவினரும் மனம் வருந்த என்பது பொருள். வீழ்ந்தார்-விரும்பினவர், அன்புடையவர்). போர்க்களத்தில் உயிர் போகாமல் கிடந்த சேரன் பிறகு போர்க் களத்திலேயே இறந்துபோனான். அப்போதும் கழாத்தலை யார் அவனைப் பாடினார் (புறம் 62). அப்பாட்டின் கீழ்க் குறிப்பு, `சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது’ என்று கூறுகிறது. இவ்விரு அரசரும் போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்ததைப் பரணரும் நேரில் பாடினார் (புறம் 63). இதனால் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் சம காலத்தவர் என்பதும் இருவரும் ஒருங்கே போர்க்களத்தில் இறந்தனர் என்பதும் தெரிகின்றன. (குறிப்பு: சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் எழுதிய திரு. வி.ஆர். இராமச்சந்திர தீஷிதர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெருஞ் சேரலாதன் என்னும் இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவர் என்று எண்ணிக்கொண்டு தவறான செய்தியைக் கூறியுள்ளார். பெருஞ் சேரலாதன் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) கரிகால் சோழனுடன் வெண்ணி என்னும் இடத்தில் போர்செய்து இறந்தான் என்று எழுதுகிறார். (சிலம்பு. ஆங்கில மொழி பெயர்ப்பு, பக்கம் 13). சேரலாதன் என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இருவரையும் ஒருவராகக் கருதிவிட்டார்). |