பக்கம் எண் :

150மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

செய்து அவர்களைச் சிறைப்பிடித்தான். இதற்குச் சான்று பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் காணப்படுகிறது, இளஞ்சேரல் இரும் பொறையின் முன்னோர்களைக் கூறும்போது, நெடுஞ்சேரலாதனைக் கூறுகிற இடத்தில்,

கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய ஒன்னார் தேயத்து
துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு
அணங்குடைக் கடம்பன் முழுமுதல் தடிந்து

என்று (9ஆம் பத்து 8: 2-6) கூறுகிறது.

இதற்குப் பழைய உரைகாரர் “கடவுட்பெயரிய கானம் என்றது விந்தாடவியை” என்று எழுதுகிறார். விந்தாடவி என்றது விந்திய மலைப் பிரதேசம். இதற்குக் தண்டாரணியம் என்றும் பெயர் உண்டு. அக்காலத்தில் இப்பிரதேசத்தைச் சாகயவன அரசர்கள் ஆண்டனர். இந்த அரசர்களைத்தான் நெடுஞ்சேரலாதன் வென்றுசிறைப்பிடித்தான். இவன் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் யவனரின் வருடைப் பசுக்களைக் கவர்ந்துகொண்டு வந்தான் என்று 6ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

சில ஆராய்ச்சிக்காரர்கள், நெடுஞ்சேரலாதன் சிறைப்பிடித்த யவனர், கிரேக்க நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு வந்து சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் குடியேறியிருந்த யவனராக இருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.* இது தவறான கருத்து. தங்கள் நாட்டில் வாணிகம் செய்யவந்த யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது அசம்பாவிதமானது. அவன் விந்திய மலைப் பிரதேசத்தில் அரசாண்டுகொண்டிருந்த சாக யவனரைச் சிறைப்பிடித்தான் என்பது மேலே கூறப்பட்டது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் பெற்ற பரிசில், `உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டி யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும்’ பெற்றார் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. உம்பற் காடு, இவ்வரசனுடைய தம்பியாகிய பல்யானைச் செல் கெழுகுட்டுவனால் புதிதாகக் கைப்பற்றப்பட்டது. இது கொங்கு நாட்டைச் சேர்ந்த ஊர்.


P. 117. The Chronology of the Early Tamils - K.N. Sivaraja Pillai 1932.

P. 18. Cera Kings of the Sangam Period - K.G. Sesha Aiyar 1937.

P. 519. A comprehensive History of India - Vol. II - K. A. Nilakanta Sastri, 1957.