| 154 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பராசரன் என்னும் பார்ப்பான் அறிந்து, சேர நாட்டுக்குச் சென்று, இவனுடைய அவைக்களத்தில் பார்ப்பனருடன் வேதம் ஓதி வெற்றிகொண்டு பார்ப்பன வாகை பெற்றான். இவனுக்கு இச்சேரன் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரக் கட்டுரை காதை கூறுகிறது. குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு மறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க நாவலங் கொண்டு நண்ணார் ஓட்டிப் பார்ப்பன வாகை சூடி யேற்புற நன்கலங் கொண்டு தன்பதி பெயர்வோன் (சிலம்பு 23 : 62-73) இவ்வரசன் இருபத்தைந்து ஆண்டு ஆட்சி செய்தான். தெய்வ பக்தியுள்ள இவ்வரசனுடைய புரோகிதர் நெடும்பாரதாயனார் என்பவர். அவர் இல்வாழ்க்கையைத் துறந்து தவஞ்செய்யக் காட்டுக்குப் போனார். அதுகண்டு இவ்வரசன் அரசையும் மனையையும் துறந்து அவருடன் காட்டுக்குச் சென்றான். ஒடுங்கா நல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற இச்செய்தியைப் பதிகம் கூறுகிறது. இதற்குப் பழைய உரை காரர் கூறும் விளக்கம் இது: “நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த வென்றது தன் புரோகிதராகிய நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடுபோக அது கண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன என்றவாறு.” |