பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்157

(இதில் நன்றா என்னும் குன்று, நாடுகாண் நெடுவரை என்று கூறப்பட்டுள்ளது காண்க.)

குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் ‘இது கனவா நனவா’ என்று ஐயுறும்படி இவ்வரசன் அவருக்குப் பெருந் தொகையைப் பரிசிலாக வழங்கினான். அப்போது அப்புலவர் இவ்வரசன்மீது ஒரு செய்யுளைப் பாடி வாழ்த்தினார் (புறம் 387)

செல்வக்கடுங்கோ இருபத்தைந்து யாண்டு ஆட்சிசெய்தான். இவன் சிக்கற்பள்ளி என்னும் இடத்தில் இறந்தான். ஆனது பற்றி இவன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான்.

அண்ணன் (களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரும் நான்கு மக்களும் இருந்தனர் என்றும் அவர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஆடு கோட்பாடுச் சேரலாதன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், இளங்கோ அடிகள் என்பவர் என்றும் கூறினோம். நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, அவனுடைய மூத்த மகனும் செங்குட்டுவனுடைய அண்ணனுமாகிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அரசனானான். இவனுக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.

இவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்று பெயர் பெற்றதற்குக் காரணங் கூறுகிறார் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர்: “களங்காய்க்கண்ணி நார்முடி யென்றது களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு. தான் முடி சூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன வென்றவாறு” என்று அவர் விளக்கங் கூறுகிறார்.

இதைச் சான்றாகக் கொண்டு திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில் இவ்வாறு கற்பித்து எழுதுகிறார்: “முடிசூடுகின்ற சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியும் கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமை பற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயற் கண்ணியும் நாரால் முடியுஞ்