| 156 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
நாடுபல படுத்து நண்ணார் ஓட்டி வெருவரு தானைகொடு செருப்பல கடந்து ஏத்தல் சான்ற இடனுடைவேள்வி ஆக்கி என்று 7-ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது. மேலும், இவன் அறநெறியறிந்து தன் புரோகிதனைவிட அறிவிற்சிறந்திருந்தான் என்று கூறப்படுகிறான். புரோசுமயக்கி மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதன் (7-ஆம் பத்து, பதிகம்) `புரோசு மயக்கி யென்றது தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்தென்றவாறு’ என்று பழைய உரை விளக்கங் கூறுகிறது. இவன் மீது 7-ஆம் பத்துப் பாடிய கபிலருக்கு இவன் பல ஊர்களைப் பரிசாக வழங்கினான். `பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ’ என்று 7-ஆம் பத்தின் பதிக அடிக் குறிப்புக் கூறுகிறது. கபிலர் அனேக ஊர்களைப் பரிசு பெற்ற செய்தியை இவ் வரசனின் பேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறையை 9-ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர் கிழாரும் கூறுகிறார். இளஞ்சேரல் இரும் பொறையுடன் போர் செய்து தோற்று ஓடிய சோழனின் வீரர்கள் போர்க் களத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையானது கபிலன், செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் பரிசாகப் பெற்ற ஊர்களைவிட அதிகமாக இருந்தது என்று அவர்கூறுகிறார். (9-ஆம் பத்து. 5.) தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைக் சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை யரசவை பணிய வரம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையில் நெஞ்சில் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே (9-ஆம் பத்து 5 : 6-13) |