| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 159 |
பாண்டியனுடைய உதவியுடன் இச்சேரனை எதிர்த்தான். அவனை நார்முடிச்சேரல் தோல்வியுறச் செய்தான். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து (4ஆம் பத்து 2 : 10-11) நார் முடிச்சேரல் பல போர்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் போர்களில் கடுமையானது துளு நாட்டு நன்னனுடன் செய்த போர். இந்தப் போர்களில் இவனுடைய தம்பியராகிய சேரன் செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், பெருஞ்சேரல் இரும்பொறையும் உதவியாக இருந்தார்கள். சேர நாட்டுக்கு வடக்கேயிருந்த துளு நாட்டு நன்னன், சேர நாட்டின் வட பகுதியிலிருந்த பூழி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும், நன்னன் கொங்கு நாட்டின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். நன்னனுடைய வளர்ச்சி சேர நாட்டின் வீழ்ச்சியாக இருந்தது. ஆகையால், நார் முடிச்சேரல் நன்னன்மேல் படை யெடுத்தான். வலிமைமிக்க நன்னனும் பின்வாங்கவில்லை. இந்தப் போர் நிலைச்செருவாகச் சில காலம் நடந்தது. கடைசியில் நார்முடிச் சேரல் வெற்றிபெற்றான். தான் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டு பிறகு நன்னனுடைய துளுநாட்டிலும் புகுந்து போர்செய்தான். இப்போரில் சேரன் செங்குட்டுவன் நன்னனுடைய நாட்டில் கடற்கரைப் பக்கமாகப் புகுந்து அவனுடைய நாட்டைத்தாக்கிப் போர் செய்து வியலூர், கொடுகூர், நறவு முதலிய ஊர்களைக் கைப்பற்றினான். நார்முடிச் சேரல் மற்றொரு பக்கமாக நன்னனைத் தாக்கினான். இவன் தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் மற்றொரு புறத்தில் தாக்கிப் போரிட்டான். இவர்களை எதிர்த்த நன்னன் கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இடங்களில் போர் செய்தான். கடைசியில் நன்னன் தோல்வியுற்றுப் போர்க்களத்தில் இறந்து போனான். துளு நாடு (கொங்கண நாடு) சேரருக்குக் கீழ்ப்படிந்தது. இச்செய்தியை, எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் (4ஆம் பத்து 10 : 13-16) என்றும், |