பக்கம் எண் :

160மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில்
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டு

(4ஆம் பத்து, பதிகம்)

என்றும் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து கூறுகிறது

கல்லாடனார் என்னும் புலவரும் இந்த வெற்றியைத் தம்முடைய செய்யுளில் போற்றுகிறார்.

குடா அது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன வளம்

(அகம் 199 : 18-24)

இவ்வாறு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேர இராச்சியத்துக்கு அடங்கியது. நன்னனுடைய மகன் சேர அரசருக்குக் கீழடங்கித் துளு நாட்டை யரசாண்டான். அவன் ‘நன்னன் உதியன்’ என்று பெயர் பெற்றான். பரணர் என்னும் புலவர், தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுளில்,

நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்

(அகம் 258 : 1-3)

என்று நன்னன் உதியனைக் கூறுகிறார். நன்னன் என்பது துளு நாட்டு அரசர் குடிப்பெயர், உதியன் என்பது சேர நாட்டு அரசர் குடிப்பெயர். சேரனுக்கு அடங்கியவன் என்பதற்காக இவன் தன் பெயருடன் உதியன் என்னும் பெயரைச் சூடிக் கொண்டான்.

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு அரசாண்டான். இவன்மீது நான்காம் பத்துப் பாடிய புலவர்