| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 165 |
செங்குட்டுவனுடைய தந்தையான நெடுஞ்சேரலாதன், தன் நாட்டுக்கு அருகிலே கடலில் இருந்த தீவு ஒன்றில் இருந்து கொண்டு, தனக்கு எதிராகக் குறும்பு செய்து கொண்டிருந்த பகைவரை வென்று அவருடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி அதனால், முரசு செய்தான் என்று முன்னமே கூறினோம் (அகம் 127 : 3-5, 347 : 3-6; பதிற்றுப்பத்து 2 ஆம் பத்து 1 : 2-16, 2 : 2-3, 7 : 4-7, 10 : 2-5; சிலம்பு 28 : 135 - 136). இந்தக் கடல்தீவுப் போர், நெடுஞ்சேரலாதன் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால், இந்தப் போரை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றவன், அக்காலத்தில் இளைஞனாக இருந்த செங்குட்டுவனே. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. இதனால், நெடுஞ்சேரலாதனுக்காக அவன் மகன் செங்குட்டுவன் இந்தப் போரை நடத்தி வென்றான் என்பது தெரிகின்றது. பதிற்றுப்பத்து 5 ஆம் பத்து 5 ஆம் செய்யுளில் பரணர் என்னும் புலவர் இக்கடற்போர்ச் செய்தியை இவ்வாறு கூறுகிறார்: தானைமன்னர் இனியா ருளரோ நின் முன்னும் இல்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி யிமைப்பின் வேல் இடுபு முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே என்று அவர் கூறுகிறார். “கடல் மறுத்திசினோராகிய தானைமன்னர் இனியாருளரோ. நின் முன்னும் இல்லையெனக் கூட்டி வினைமுடிவு செய்க. கடல் மறுத்தல் என்றது கடலிற் புக்கு ஒருவினை செய்தற்கு அரி தென்பதனை மறுத்தலை” என்று இதற்கு விளக்கங் கூறுகிறது பதிற்றுப்பத்தின் பழைய உரை. செங்குட்டுவன் காலத்திலும் அவனுடைய தந்தை நெடுஞ் சேரலாதன் காலத்திலும் இருந்த பரணரே, செங்குட்டுவன்தான் முதல் முதல் கடற்போர் செய்தான், அவனுக்கு முன்பு கடற்போர் செய்தவர் இலர் என்று கூறுகிற படியினாலே செங்குட்டுவன் இந்தக் கடற் போரைத் தன் தந்தை ஏவியபடி செய்தான் என்பது தெரிகின்றது. நெடுஞ்சேர லாதனை 2 ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் இக் கருத்தையே கூறுகிறார். |